Published : 21 Aug 2019 03:55 PM
Last Updated : 21 Aug 2019 03:55 PM

உத்தரகண்ட் மலைப் பிரதேசத்தில் நிவாரண பொருட்கள் கொண்டுச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: மீட்புப் பணியாளர்கள் 3 பேர் பலி

மலையில் விழுந்து நொறுங்கிய வெள்ள நிவாரணப் பொருட்கள் எடுத்துச்சென்ற தேசிய பேரிடர் மீட்பு ஹெலிகாப்டர் | படம்: ஏஎன்ஐ

உத்தரகாசி(உத்தரகண்ட்)

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளநிவாரணப் பொருட்கள் எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் மூவர் பலியாகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், அசாம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. வெள்ளம், நிலச்சரிவு ஆகிய காரணங்களால் பேரிழப்புகளை அம்மாநிலங்கள் சந்தித்து வருகின்றன.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உத்தரகாசி மாவட்டத்தில் மோல்டி பகுதியில் கடும் மழை, வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

தேசிய பேரிடர் மீட்புப் படைப் பணியாளர்கள் குழு ஒன்று இன்று காலை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இந்த இமயமலைப் பகுதி ஏராளமான சிறுசிறு மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இதனால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

“இன்று காலை நிவாரணப் பொருட்கள் எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள மோரிக்கும், மோல்டிக்கும் இடைப்பட்ட மலைப்பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் பயணம்செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நடந்ததற்கான காரணங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் தகவல்கள் எதிர்க்கப்படுகின்றன”.

இவ்வாறு தேசிய பேரிடர் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x