

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் முதல்முறையாக இன்று நடந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். சிறப்பு போலீஸ் அதிகாரியும் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு 15 நாட்களுக்குப்பின் நடந்த முதல் என்கவுண்டர் இதுவாகும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தையும் லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு கடந்த 15 நாட்களாக கடும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன.
மாநிலத்தில் நேற்று முதல் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். பல்வேறு நகரங்களில் பாதுகாப்பு படையினர் விதித்திருந்த கட்டுப்பாடுகளையும், கெடுபிடிகளையும் தளர்த்தியுள்ளனர்.
இந்தசூழலில் ஸ்ரீநகரில் இருந்து 55 கி.மீ தொலைவில் இருக்கும் பாரமுல்லா மாவட்டத்தில் கானி-காமா என்ற பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.
அப்போது, தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால்சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் மாலையில் இருந்து துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் என்று பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த சண்டையில் சிறப்பு போஸீஸ் அதிகாரி பிலால் அகமது, எஸ்ஐ அமர்தீப் பரிஹார் ஆகியோர் காயமடைந்தனர். இதில் ராணுவ மருத்துவனையில் குண்டு காயங்களுடன் பரிஹார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி அகமது வீரமரணம் அடைந்தார் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதி உடல் மீட்கப்பட்டு, அவரிடம் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளுடான துப்பாக்கிச் சண்டை நடந்த பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அங்கு பயங்கர வெடிபொருட்களை மறைத்து வைத்திருக்கலாம் என்பதால், அங்கு தீவிர சோதனைக்குப்பின் அங்கு மக்கள் செல்லுமாறு பாதுகாப்பு படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தருமாறும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பிடிஐ