

புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றவாளி என்று சொல்லப்படவில்லை, அவருக்கு முன்ஜாமீன் மட்டுமே மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் போல் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கான முன் ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா: பிடிஐ
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான ஆனந்த் சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
ப.சிதம்பரத்தின் வீட்டில் இரவு நேரத்தில் சிபிஐ வந்து தேடும் அளவுக்கு என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை. சமூகத்தில் ப.சிதம்பரம் மதிப்புமிக்க மனிதர், சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவர். கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் சிபிஐயை மத்திய அரசு பயன்படுத்துவதை பார்க்கிறோம்.
காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுகின்றனர்.
பாஜகவைச் சேர்ந்த முதல்வர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மூத்த தலைவர்கள் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்தபோதிலும்கூட சிபிஐ, அமலாக்கப்பிரிவு அமைதியாகத்தான் இருந்தன.
ஆனால், முகுல் ராய், ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர்கள் பாஜகவில் சேர்ந்தபின் அவர்கள் மீதான விசாரணை கிடப்பில் போடப்பட்டது. எதிலுமே இரட்டை நிலைப்பாடு இருக்க முடியாது, தெளிவில்லாமல் இருக்கிறது. இதுபோன்ற செயல்கள் நாட்டின் தோற்றத்துக்கு நல்லதல்ல.
ப.சிதம்பரம் சிபிஐ அமைப்பின் விசாரணைக்கு தேவைப்பட்டபோதெல்லாம் ஆஜராகினார், ஒத்துழைத்தார். எந்த விதமான சூழலிலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததில்லை அப்படி இருக்கும் போது இரவில் வந்து அவரை தேடிச்செல்ல வேண்டிய அவசியம், அவசரம் சிபிஐக்கு என்ன இருக்கிறது. அரசின் விசாரணை அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை மதிக்க வேண்டும், நம்பிக்கை வைக்க வேண்டும்.
முன் ஜாமீன் மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு எடுக்கும்வரை சிபிஐ அமைப்பால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மனுவை மட்டும்தான் தள்ளுபடி செய்துள்ளது, அவரை குற்றவாளி என அறிவிக்கவில்லை.
இதுஒன்றும் மிகப்பெரிய கொடுங்குற்றமல்ல. இது பொருளாதாரரீதியான குற்றம்தானே. இந்த வழக்கு ஜாமீன் பெற தகுதியான வழக்குதான். இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
பிடிஐ