Published : 21 Aug 2019 11:03 AM
Last Updated : 21 Aug 2019 11:03 AM

எடியூரப்பாவை முதல்வராக்கி தான் எதிர்க்கட்சித் தலைவராக விரும்பினார் சித்தராமையா: ஆட்சிக் கவிழ்ந்தது ஏன்? தேவகவுடா விளக்கம்

பெங்களூரு:

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி முறிவடைந்து ஆட்சிக் கவிழ்ந்ததற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாதான் காரணம் என்று தேவகவுடா சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸின் நோக்கம் பாஜகவை வெளியேற்றுவதுதான், ஆனால் சித்தராமையாவினால் இந்த முடிவுடன் உடன்பட முடியவில்லை. சித்தராமையாவுக்கும் குமாரசாமிக்கும்தான் உண்மையில் சண்டை என்று கூற வேண்டும். குமாரசாமியை முதல்வராகப் பார்க்க சித்தராமையாவினால் முடியவில்லை, அவரை இது காயப்படுத்தியது மேலும் கடும் ஆத்திரத்தில் இருந்தார். அதுவும் மைசூரு சாமுண்டேஸ்வரி தோல்விக்குப் பிறகே மதச்சார்பற்ற ஜனதாதளத்தை அழித்தொழிக்க அவர் சபதம் எடுத்தார்.

கூட்டணிக்கு முன்பாக சித்தராமையாவிடம் ராகுல் காந்தியோ, சோனியாவோ பேசவில்லை. காங்கிரஸ் அதிருப்தியாளர்களும் சித்தராமையாவுக்கு ஆதரவானவர்களே என்னிடம் கூறியது என்ன தெரியுமா? லோக்சபா தேர்தல்களில் என்னுடைய தோல்விக்கும் என் பேரன் தோல்விக்கும் அவர்தான் காரணம் என்றார்கள். எங்களுக்கு எதிராக வேலை செய்தவர்களுக்கு எதிராக காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்ததா? இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியினுள் சித்தராமையாவை யாரும் எதிர்க்க முடியாது என்ற நிலைதான்.

சித்தராமையாவின் நோக்கம் என்னவெனில் எடியூரப்பாவை முதல்வராக்கி, தான் எதிர்க்கட்சி தலைவர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதே. அவரும் எடியூரப்பாவும் கடந்த காலத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். பெல்லாரிக்கு சட்ட விரோத சுரங்கத்துக்கு எதிராக பாதயாத்திரை சென்றதைத் தவிர எதிர்க்கட்சியாக சித்தராமையா என்ன சாதித்து விட்டார்? எடியூரப்பா அரசுக்கு எதிராகப் போராடியது யார்? உண்மையாக போராடியது குமாரசாமிதான், சித்தராமையா அடையாள போராட்டம்தான் செய்தார்.

சித்தராமையா மஜதவை அழிக்க வேண்டும் என்று நினைத்து இறங்கியதன் தொடக்கம் 2004ம் ஆண்டு. முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் சேர்ந்து இதை முயற்சித்தார். 1996ம் ஆண்டு நான் பிரதமராகப் பதவியேற்க டெல்லி சென்ற போது அவரை முதல்வராக்கவில்லை என்பதிலிருந்து சித்தராமையாவுக்கு என் மீது கடும் கோபம் இருந்தது. 2004-ல் கூட்டணி அமைந்த பிறகு அவர் முதல்வராக்கப்படாதது குறித்தும் என் மீது கோபம். 2004-ல் சித்தராமையாவை முதல்வராக்க நான் எப்படி பாடுபட்டேன் என்பதை அப்போதைய இடைக்கால காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்திதான் இப்போது அவருக்கு வெளியிட வேண்டும்.

இவ்வாறு கூறினார் தேவகவுடா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x