

புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை வேட்டையாட முயல்வது வெட்கக்கேடு, உண்மையை பலநேரங்களில் கோழைகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று காங்கிரஸ்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த போது, கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 2018-ம் ஆண்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுனில் கவுர் நேற்று தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. ப.சிதம்பரத்தை கைது செய்யும் நோக்கில் நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை 4 முறை டெல்லியில் உள்ள அவரின் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "மாநிலங்களவையின் மதிப்புக்குரிய, தகுதியான உறுப்பினர் ப.சிதம்பரம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்கு உண்மையாக நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் சேவை செய்துள்ளார்.
ப.சிதம்பரம் தயக்கிமின்றி மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராக சில உண்மைகளை உரக்கப் பேசுகிறார், அரசின் தோல்விகளை வெளிப்படுத்துகிறார்.ஆனால் இந்த உண்மைகள் கோழைகளுக்கு அசவுகரியமாக இருப்பதால், ப.சிதம்பரம் வெட்கக்கேடான முறையில் வேட்டையாடப்படுகிறார். ப.சிதம்பரத்துக்கு ஆதராக இருந்து, உண்மைக்காக எந்த விளைவுகள் வந்தாலும் தொடர்ந்து போராடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ