

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக் கெடுப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதி, மதம், வருமானம் உள்ளிட்ட விவரங் களை அரசின் இணையதளத்தில் வெளியிட அம்மாநில சமூக நலத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நாட்டில் முதல் முறையாக கர்நாடகத்தில் கடந்த ஏப்ரலில் ரூ.189 கோடி செலவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகள், இந்து மடாதிபதிகளின் எதிர்ப்பை மீறி இந்த கணக்கெடுப்பை ஆளும் காங்கிரஸ் அரசு மேற்கொண்டது.
இந்த கணக்கெடுப்பின் போது ஜாதி, மதம், வருமானம், கல்வித் தகுதி, உணவுப் பழக்கம் உட்பட 21 முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்நிலையில் ஜாதிவாரி கணக் கெடுப்பு குறித்து சமூக நலத்துறை யின் முதன்மை செயலர் ஷாலினி ரஜினிஷிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “ஜாதிவாரி கணக் கெடுப்பில் சேகரிக்கப்பட்ட 21 வித மான விவரங்களை கர்நாடக அர சின் இணையதளத்தில் வெளியிடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குடிமக்களின் ஜாதியை அனைவரும் தெரிந்துகொள்ள லாம்” என தெரிவித்தார்.
ஜாதி விவரங்களை இணைய தளத்தில் வெளியிடும் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக தலித் சங்கர சமிதி தலைவர் மாவள்ளி சங்கர், ‘தி இந்து’விடம் கூறும்போது, “மக்களின் ஜாதி, மதம் உள்ளிட்ட விவரங்களை அரசு இணையதளத் தில் வெளியிடுவது தவறு. நாட்டில் நாள்தோறும் ஜாதியின் பெயரால் தீண்டாமை, கவுரவ படுகொலை நடந்து வருகிறது. நகரங்களிலும் தலித்துகள் மீது ஜாதிய வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது. பெங்களூரு போன்ற நகரங்களில் தலித்துகளுக்கு வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை. கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயாவுக்கே இவ்வாறு நடந்துள்ளது. ஜாதிவெறி மிகுந்த இந்த சமூகத்தில் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் தங்கள் ஜாதியை மறைத்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் கர்நாடக அரசின் முடிவால் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படும். இதனால் சமூகத்திலும், கல்லூரியிலும், அலுவலகத்திலும் மக்களை ஜாதி ரீதியாகவே அணுகுவார்கள். வெளிப்படையாக ஜாதியின் பெயரால் வன்கொடுமைகள் நிகழும் அபாயம் உள்ளது. எனவே ஜாவாரி விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் முற்போக்கு இயக்கங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றார்.