

புதுடெல்லி
பிரதமர் நரேந்திர மோடி பங் கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் என்ற தலைப்பிலான நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் அண்மையில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் அதிக அளவில் ட்விட்டரில் டிரெண்டான நிகழ்ச்சி யாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்கு பாதுகாப்பை மையக் கருத்தாக கொண்டு, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி, கடந்த 12-ம் தேதி ஒளிபரப்பானது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறார். அதன் ஒருபகுதியாகத்தான் இந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சி டிஸ்கவரி சேனல் வழியாக 180 நாடுகளில் ஒளிபரப்பானது.
இந்நிலையில் பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “உலகில் அதிகம் டிரெண்டான ஒரு டிவி நிகழ்ச்சி இதுதான்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகம் முழுவதும் 360 கோடி முறை இந்த நிகழ்ச்சி குறித்த ட்வீட்களை மக்கள் பார்த்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு இந்த சாதனையை 53-வது சூப்பர்பவுல் நிகழ்ச்சி வைத்திருந்தது. இந்த அமெரிக்க கால்பந்து போட்டி குறித்த ட்வீட்கள் 340 கோடி முறை மக்களால் பார்க்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சாதனையை பிரதமர் மோடி பங்கேற்ற இந்நிகழ்ச்சி முறியடித்துள்ளது.