சென்னைக்கு தண்ணீர் தர இயலாது: கைவிரித்த ஆந்திர அதிகாரிகள்

சென்னைக்கு தண்ணீர் தர இயலாது: கைவிரித்த ஆந்திர அதிகாரிகள்
Updated on
1 min read

என்.மகேஷ்குமார்

திருப்பதி

சோமசீலா அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால் சென் னைக்கு தற்போது தண்ணீர் வழங்க இயலாது என ஆந்திர நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமீபத்தில் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், முதல்வர் பழனிசாமி உத்தரவின்பேரில் தமிழக அமைச்சர்கள், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து, கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கு சம்மதம் தெரிவித்த ஜெகன்மோகன், சென்னைக்கு போதிய தண்ணீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருப்பதியில் உள்ள தெலுங்கு கங்கை குடிநீர் கால்வாய் திட்டப் பிரிவின் பொறியாளர்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தில் சோமசீலா, கண்டலேறு ஆகிய அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. சைலம் அணையில் தற்போது திறக்கப்படும் ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே சோமாசீலா அணைக்கு வருகிறது. இந்த அணையில் தற்போது 4.5 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஆனால் இங்கு குறைந்தபட்சம் 30 டிஎம்சி தண்ணீர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்க முடியும். கண்டலேறு அணையில் தற்போது சுமார் 3.5 டிஎம்சிக்கும் குறைவான நீரே உள்ளது. கண்டலேறு அணையில் குறைந்தபட்சம் 23 டிஎம்சி தண்ணீர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து சென்னைக்கு தெலுங்கு கங்கை கால்வாயில் (தமிழகத்தில் கிருஷ்ணா கால்வாய்) தண்ணீரை திறக்க முடியும். இதனால் இன்னும் 20 - 25 நாட்களுக்கு சென்னைக்கு தண்ணீர் வழங்க இயலாது.

சைலம் அணையில் தண்ணீர் இருப்பு அதிகம் இருந் தாலும் அங்கிருந்து சோமசீலா அணைக்கு அதிக தண்ணீரை கொண்டுவர பெரிய கால்வாய் வசதி தேவை. இந்த இரண்டு அணைகளுக்கும் இடையிலான கால்வாயை அகலப்படுத்த வேண் டும். இதற்கு ஆகும் செலவை ஆந்திராவும் தமிழ்நாடும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த வாரம் திருப்பதி யில் எங்களை சந்தித்த தமிழக அதிகாரிகளிடம் தெரிவித்துள் ளோம்.

இவ்வாறு தெலுங்கு கங்கை திட்ட ஆந்திர பொறியாளர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in