

புதுடெல்லி
ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் ராணுவ சோதனைக்கூடங்களையும் இடத்தையும் பயன்படுத்தி சோதித்துக் கொள்ளும் முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்திய விமானப்படை தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியது மேலும் மிதமிஞ்சிய சக்தி வாய்ந்தது, இதனை பாகிஸ்தான் பகுதியில் புகுந்து நடத்திய தாக்குதலிலேயே அறிந்து கொள்ள முடியும் என்று கூறிய ராஜ்நாத் சிங் ராணுவ உற்பத்தித் துறையில் சம அளவில் தனியாருக்கும் இடமளிக்கும் விதமாக உள்நாட்டு தனியார் தளவாட உற்பத்தியாளர்கள் ராணுவ சோதனை இடங்களையும் கூடங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றார்.
“உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்களின் கருத்தைக் கேட்டறிந்த பிறகு அரசின் சோதனைக் கூடங்கள், வசதிகளை தனியாரும் பயன்படுத்திக் கொள்ளும் முன்மொழிவுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று உள்நாட்டு உற்பத்திமயமாக்கம் நவீனமயமாக்கம் பற்றிய ஐஏஎப் கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக உள்ள சிக்கல்களையும் தடைகளையும் நீக்கும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் ராஜ்நாத்.
இந்தியத் தொழிற்துறை ராணுவ உற்பத்தியின் ஒரு மிகப்பெரிய அங்கமாக உள்ளது, ஆனால் அவர்கள் சோதித்துப் பார்க்கவும் மதிப்பீடு செய்து கொள்ளவும் மேம்படவும் வசதிகள் குறைவு. இதனால் வெளிநாடுகளில் சோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
தொழிற்துறை வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் உரிமங்கள் வழங்குவதற்கு ராணுவ பொருட்களுக்கான பட்டியல் திருத்தப்பட்டுள்ளது.