ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுப்பு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுப்பு: ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
Updated on
1 min read

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது (2007), நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்ட ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் அவரைக் கைது செய்யத் தடை விதித்தது. பின்னர் இந்தத் தடையை நீதிமன்றம் அவ்வப்போது நீட்டித்து வந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ப.சிதம்பரத்தைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது என வாதிட்டனர்.

இதனையடுத்து சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதேசமயம் மேல்முறையீடு செய்வதற்காக சிதம்பரத்துக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்ப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ப.சிதம்பரம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சருமான கபில் சிபல் மனுவைத் தாக்கல் செய்தார்.

மனுவை உடனடியாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அவருடன் அபிஷேக் மனுசிங்வி உள்ளிட்ட காங்கிரஸைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் உடன் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in