

ஆர்.ஷபிமுன்னா
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பவர்களைக் கைது செய்து வைக்க தனியார் இடத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதில், இடம்பெற்ற பொதுமக்களில் அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், வழக்கறிஞர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து கடந்த ஆகஸ்ட் 5-ல் ரத்து செய்யப்பட்டது. அப்போது முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசிற்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கான அரசு பாதுகாப்பிற்கு இடப்பற்றாக்குறை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் விருந்தினர் மாளிகைகள் மற்றும் காலியான வீடுகளை அரசு வாடகைக்கு எடுக்க வேண்டி உள்ளது.
இந்தப் பட்டியலில் இதுவரை சுமார் 700 பேர் இடம் பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோரும் அடங்கியுள்ளனர்.
குடிமைப்பணி தேர்வின் முதல் இடம் பெற்றவரும், தன் ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்தவருமான ஷா பைசலும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர், புதிதாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார்.
இவர்கள் அன்றி, ராணுவத்தினர் மீது கல் எறிபவர்களிலும் பலர் கைது செய்யப்பட்டு பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, ''ஜம்மு-காஷ்மீரின் சிறைகள் நிரம்பி வழிவதால் அரசு சார்பில் பல்வேறு தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொது இடங்களில் கூட்டம் கூடி போராட்டம் நடத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கக் கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் கூடும் வாய்ப்புகள் உள்ளன'' எனத் தெரிவித்தனர்.
எனினும், ஆகஸ்ட் 6-ல் இருந்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அல்லது மத்திய அரசு சார்பில் அதிகாரபூர்வமான கைது எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, முன்னாள் முதல்வர்களும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தச் சட்டத்தின் கீழ் விசாரணை இன்றி இரண்டு வருடங்கள் வரை எவரையும் மத்திய அரசு தடுப்புக் காவலில் வைக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதற்கு, இதுபோன்ற தகவல்களால் அம்மாநிலத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பது காரணம் ஆகும்.