Published : 20 Aug 2019 02:05 PM
Last Updated : 20 Aug 2019 02:05 PM

'படுக்கை இல்லை'; அனுமதிக்க மறுத்த அரசு மருத்துவமனை - நடைபாதையில் குழந்தை பெற்ற பெண்

ஃபரூகாபாத்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என்று கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்ததால் நடைபாதையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.08.19) அன்று, பிரசவ வலியுடன் துடித்த ஒரு பெண்ணை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்க்க வந்தனர்.

தங்கள் மருத்துவமனையில் போதுமான படுக்கைகள் இல்லை. ஆகவே பிரசவத்துக்காக அனுமதிக்க இயலாது என்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஆனால் பிரசவ வலியால் துடித்த அந்தப் பெண்ணை வேறு மருத்துவமனையிலும் சேர்க்க முடியாத நிலையில் உறவினர்கள் தவித்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனை வளாக நடைபாதையிலேயே அப்பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து உள்ளூர் நிருபர்களிடம் பகிர்ந்த பிறகு இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மருத்துவமனை வளாக நடைபாதையில் தரையில் கிடக்கும் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கும் காட்சி காண்போரைக் கதிகலங்கச் செய்வதாக உள்ளது.

குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு அந்தப் பெண் பிரசவ வார்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஃபரூகாபாத் மாவட்ட நீதிபதி மோனிகா ராணி உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்று கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தனது உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்த இதே மருத்துவமனையில்தான் கடந்த 2017-ம் ஆண்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 49 பிஞ்சுக் குழந்தைகள் இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x