Published : 20 Aug 2019 11:26 AM
Last Updated : 20 Aug 2019 11:26 AM

வெறுப்பின்மை, அன்பு, மன்னிப்பை கற்றுக்கொடுத்த தந்தை: ராஜீவ் காந்தி பிறந்த நாளில் ராகுல் உருக்கம்

புதுடெல்லி,

வெறுப்புணர்வின்றி பழகுதல், அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருத்தல், மன்னிப்பு வழங்குதல் போன்ற நல்ல குணங்களை எனக்குக் கற்றுத் தந்தவர் எனது தந்தை என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் ராகுல் காந்தி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாள் விழா இன்று காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள வீர பூமியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு மூத்த தலைவர்கள் சென்று நேரில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், பூபேந்திரசிங் ஹூடா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வந்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்புப் பிரார்த்தனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பிரார்த்தனையில் ராஜீவ் காந்தி குடும்பத்தினரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்றனர்.

தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் " ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். தேசப்பற்றாளரான ராஜீவ் காந்தி தனது தொலைநோக்குப் பார்வையாலும், கொள்கைகளாலும் இந்தியாவைக் கட்டமைக்க உதவியவர். எனக்கு அன்பான தந்தையாக இருந்து யார் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாமல், மன்னிப்பு வழங்கவும், அனைத்து உயிர்கள் மீது அன்பு செலுத்தவும் கற்றுக்கொடுத்தவர்" எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் விடுத்த செய்தியில், " நம்முடைய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் அவருக்கு நான் என்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், " இந்தியாவின் வலிமை என்பது ஒற்றுமையும், பல்வேறுபட்ட மக்கள் வாழ்வதிலும் இருக்கிறது. ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளான இன்று அவரை நாம் நினைவுகூர்வோம். இப்போதுள்ள சூழலுக்கு அவரின் வார்த்தைகள் பொருந்தும் விதமாக இருப்பதால் அவரை நினைவுகூர்வோம்.

நமக்குள் இருக்கும் ஒற்றுமையைத் தகர்க்கும் விதத்தில் வகுப்புவாதங்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. 21-ம் நூற்றாண்டில் இந்தியாவைத் தடைசெய்ய முடியாத அளவுக்கு வலிமையானதாக மாற்ற ராஜீவ் காந்தி கனவு கண்டார். தொழில்நுட்பம், கல்விக்கு முக்கியத்துவம் அளித்த ராஜீவ் காந்தி, சமூகத்தில் நலிந்த பிரிவினரின் குரலாக இருந்தார்" எனத் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மிகப்பெரிய அளவில் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச உள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x