மும்பை புறநகரில் பத்திரிகையாளர் படுகொலை

மும்பை புறநகரில் பத்திரிகையாளர் படுகொலை
Updated on
1 min read

மும்பையில் தனியார் மதுபான விடுதியில் போலீஸார் நடத்திய ரெய்டு குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரெய்டு நடந்த விடுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற மேலும் இரண்டு பத்திரிகையாளர்கள் பார் ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

மும்பை புறநகர் பகுதியான நயா நகரில் இருக்கிறது ஒயிட் ஹவுஸ் பார். இங்கு போலீஸார் ரெய்டு மேற்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து உள்ளூர் பத்திரிகை நிருபர்கள் சந்தோஷ் மிஸ்ரா, சாஷி சர்மா அங்கு சென்றுள்ளனர். போலீஸார் நடவடிக்கையை அவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது பாரில் இருந்து ஊழியர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் இருந்து தப்பி அவர்கள் இருவரும் அங்கிருந்த சென்ற பிறகு, ராகவேந்திரா துபே என்ற மற்றொரு பத்திரிகையாளரும் செய்தி சேகரிக்க அங்கே சென்றுள்ளார். அவரும் பார் ஊழியர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து மீரா நகர் காவல் நிலையம் சென்றுள்ளார்.

காவல் நிலையத்தில் இருந்து ராகவேந்தர் துபே புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே எஸ்.கே.ஸ்டோன் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் வந்துள்ளது. போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது அது ராகவேந்தர் துபே எனத் தெரியவந்துள்ளது. பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பத்திரிகையாளர்கள் ராகவேந்தர் துபே மரணத்துக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in