Published : 19 Aug 2019 03:47 PM
Last Updated : 19 Aug 2019 03:47 PM

வெள்ளம் வந்து ஓராண்டு கடந்தும் அறிவித்த நிவாரண நிதியை வழங்காத கேரள மின்சார வாரியம்

திருவனந்தபுரம்

கேரளாவில் கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது முதல்வர் நிவாரண நிதிக்கு 130 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்த அம்மாநில மின்சார வாரியம் இன்று வரை அந்த பணத்தை வழங்க வில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன.

வெள்ளப் பாதிப்புகளை சரி செய்வதற்காக முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பல்வேறு மாநில மக்களும், அரசுகளும் நிதி வழங்கின. கேரள மாநில மக்களும் மனமுவந்து நிதி வழங்கினர்.

அப்போது கேரள மாநில மின்சார வாரியத்தின் சார்பில் 130 கோடி ரூபாய் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மின்சார வாரியத்தின் நிதி 50 கோடியும், அதில் பணியாற்றும் ஊழியர்கள் மாதந்தோறும் 3 நாட்கள் சம்பளம் வீதம் மொத்தம் 130 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அப்போது கேரள மின்சார வாரிய நிர்வாகிகள் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முதல்கட்ட தவணையாக 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு ஓராண்டு ஆனப்பிறகும் மீதமுள்ள 120 கோடி ரூபாயை இன்னமும் வழங்கவில்லை.

இந்த ஆண்டு மீண்டும் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் நிவாரணப் பணிகளில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் மாநில அரசுக்கு பணம் வரவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கேரள மாநில மின்சார வாரிய தலைவர் என்.எஸ். பிள்ளை இதனை ஒப்புக் கொண்டுள்ளார். சில நிதி நெருக்கடியால் பணம் வழங்கவில்லை என்றும், விரைவில் முதல்வரிடம் பணம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் ஊழியரகளிடம் பிடித்த பணத்தை கூட வழங்காதது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள அரசின் ஒவ்வொரு துறைகளிலும் மோசடி நடைபெறுவதாக திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x