Published : 19 Aug 2019 01:29 PM
Last Updated : 19 Aug 2019 01:29 PM

காஷ்மீர் விவகாரம்: தேசத்துரோக சட்டத்தின்கீழ் டெல்லி மாணவியைக் கைது செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி

இந்திய ராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போலிச் செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் டெல்லி மாணவி ஷீலா ரஷீத்தை கிரிமினல் வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஷீலா ரஷீத் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி. இவர் மாணவர்களின் தலைவராகவும் சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதி வரும் இவர், தனது பதிவுகள் மூலம் தொடர்ந்து தேசத்திற்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக காஷ்மீரில் சமீபத்திய நிலவரங்கள் குறித்து இவரது பதிவுகள் இந்திய ராணுவத்திற்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் பதிவுகளை இவர் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய ராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போலிச் செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா ஷீலா ரஷீத்துக்கு எதிராக ஒரு கிரிமினல் புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

மாணவி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மனுவில் வழக்கறிஞர் ஸ்ரீவஸ்த்தவா கூறியுள்ளதாவது:

''ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன் மாணவி ஷீலா ரஷீத் வேண்டுமென்றே போலிச் செய்திகளைப் பரப்பி வருகிறார். அவரது ட்வீட் பல ட்விட்டர் பயனர்களால் பின்தொடரப் படுகிறது. இந்தப் போலிச் செய்திகள் சர்வதேச தளங்களில் பகிரப்பட்டும் வருகிறது. இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத களங்கம் ஏற்பட்டுள்ளது.

இவர் செய்து வருவது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-ஏ இன் கீழ் மிகப்பெரிய தேசத்துரோக குற்றமாகும். இது அரசாங்கத்தின் மீதான அதிருப்தியைத் தூண்டுகிறது.

மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 153, 153-ஏ, 504, 505 பிரிவுகளின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2002 இன் கீழ் வகுப்பு வாத பகைமைகளை ரஷீத் தூண்டி வருகிறார். இவரது செயல்பாடுகளை முடக்கி இவர் கிரிமினல் குற்றச்சாட்டில் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்''.

இவ்வாறு வழக்கறிஞர் ஸ்ரீவஸ்த்தவா மனுவில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் இந்திய ராணுவம் பொதுமக்களைத் துன்புறுத்துவதாக தனது ட்விட்டர் பதிவுகளில் ஷீலா ரஷீத் தெரிவித்திருந்தார். இதனை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x