பள்ளியில் அடைக்கலம் புகுந்த பெண் துப்புரவுத் தொழிலாளியை தரதரவென இழுத்து வெளியேற்றிய கொடூரம்; வீடியோ
ராய்ப்பூர்
சத்தீஸ்கரில் மழை வெள்ளத்தால் பள்ளியில், 3 மாதக் குழந்தையுடன் அடைக்கலம் புகுந்த பெண் துப்புரவுத் தொழிலாளியை பள்ளி நிர்வாகியின் கணவர் தரதரவென இழுத்து வெளியே தள்ளிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கோரியா என்ற பகுதியில் பர்வானி கன்யா ஆஸ்ரமத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்திலேயே மாணவ, மாணவியர் தங்கும் விடுதியும் உள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்புரவுப் பெண் பணியாளர் ஒருவர் தனது 3 மாதக் குழந்தையுடன், தான் பணி செய்யும் பள்ளியில் தங்கியுள்ளார். பள்ளியின் கண்காணிப்பாளராக சுமிலா சிங் என்ற பெண் பணியாற்றி வருகிறார்.
அவரது கணவர் ரங்கலால் சிங் என்பவர் பள்ளி தங்கும் விடுதிக்கு வந்து அங்கு அடைக்கலமாகத் தங்கியிருந்த துப்பரவுத் தொழிலாளியை அங்கிருந்து வெளியே செல்லுமாறு மிரட்டியுள்ளார்.
3 மாதக் குழந்தையுடன் வெளியே செல்ல முடியாத நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவர் தரதரவென இழுத்து வெளியே தள்ளினார். அவரது உடமைகளையும் வெளியே தூக்கி வீசினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுதொடர்பான புகாரை அடுத்து ரங்கலால் சிங் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
