செய்திப்பிரிவு

Published : 19 Aug 2019 12:39 pm

Updated : : 19 Aug 2019 12:39 pm

 

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்வு: திறக்கப்பட்டும் வெறிச்சோடிய பள்ளிகள்; ஆசிரியர்கள் வந்தார்கள், மாணவர்கள் வரவில்லை

teachers-report-to-schools-in-kashmir-students-don-t
ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் இன்று பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டபோதிலும்கூட, ஆசிரியர்கள் மட்டுமே வந்திருந்தனர். பெரும்பாலான மாணவர்கள் வராததால் பள்ளிகள் வெறிச்சோடிக்கிடந்தன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக், ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.

இந்த நடைமுறையால் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்கும் பொருட்டு கடந்த 14 நாட்களாக கடும் கட்டுப்பாடுகளை போலீஸார், பாதுகாப்புப் படையினர் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இந்த 14 நாட்களாக மாநிலத்தில் செல்போன், தொலைபேசி சேவை, மருத்துவமனை, வங்கிகள், அரசு அலுவலகங்கள் முடக்கப்பட்டன. தொலைக்காட்சி சேனல்கள் எதுவும் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் கூட்டமாக வெளியே செல்லவும், ஒன்று கூடவும் அனுமதிக்கப்படவில்லை.

ஈகைப் பண்டிகைக்கு முன்பாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பின்னர் மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன. கடந்த வாரம் ஜம்மு, சம்பா, கதுவா, உதம்பூர், ரேசாய் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மட்டும் குறைந்த சக்தி அலைவரிசையான 2 ஜி சேவை மட்டும் தரப்பட்டது. ஆனால், செல்போனில் வதந்திகளையும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் வதந்திகளை சிலர் பரப்பியதால், செல்போன் சேவையையும் போலீஸார் ரத்து செய்தனர்.


இந்நிலையில் 15-வது நாளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை. இன்று அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றைத் திறக்க அரசு முடிவு செய்திருந்தது. ஆனாலும், பாதுகாப்பு சூழல், பதற்றம் ஆகியவற்றைக் காரணம் காட்டி பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவில்லை.

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " ஸ்ரீநகரில் மட்டும் 190 தொடக்கப் பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆனால், மற்ற பள்ளிகள் இன்னும் மூடியே இருக்கின்றன. தொடர்ந்து 15-வது நாளாக தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த இரு நாட்களாக ஏற்பட்ட கலவரம், வன்முறையால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயங்குகின்றனர். பெமினாவில் உள்ள போலீஸ் பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளி மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அங்கும் மாணவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை சிலர் மட்டுமே வந்தனர்.

பதான், பல்ஹலான், சிங்போரா, பாரமுல்லா, ஷோப்பூர் நகரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகளைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்பதால், மாணவர்கள் வருகைப்பதிவு, வராத மாணவர்கள் குறித்துக் கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

ஸ்ரீநகரின் மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஸ்ரீநகரின் பழைய நகரம் மற்றும் சிவில் லைன் பகுதிகளில் சில பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும் மாணவர்களைக் காணவில்லை" எனத் தெரிவித்தார்

பரூக் ஆகமது தார் என்ற பெற்றோர் கூறுகையில் " மாநிலத்தில் நிலையற்ற சூழல் நிலவும்போது எப்படி எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது. இப்போதுள்ள சூழலில் குழந்தைகளை அனுப்பும் கேள்விக்கே இடமில்லை" எனத் தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் இன்று பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை போலீஸார் நீக்கி போக்குவரத்துக்கு வழி செய்தனர். இருப்பினும் குறைந்த அளவே போக்குவரத்து இருக்கிறது. ஸ்ரீநகர் மார்க்கெட் பகுதிகளில் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. தனியார் வாகனங்கள் சென்றாலும், அரசுப்பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை

பிடிஐ

Teachers reportKashmirStudents don’tKashmir as restrictionsNot many students were seen.வெறிச்சோடிய பள்ளிகள்காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்வுஆசிரியர்கள் வந்தார்க
Popular Articles

You May Like

More From This Category

More From this Author