

லக்னோ,
முத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்தபின்பும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக முத்தலாக் கூறும் நடைமுறை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். முத்தலாக் தடைச் சட்டம் வந்த பின்பும், முத்தலாக் கூறும் நடைமுறை கட்டுப்படுத்தப்படவில்லை, தடுக்கப்படவில்லை. போலீஸார் நடவடிக்கையைத் தீவிரம் காட்டவில்லை என்று பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம்கள் பெண்களுக்கு எதிராக அவர்களின் கணவர்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையை உச்ச நீதிமன்றம் தடை செய்து, சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு இயற்றி, கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, முத்தலாக் கூறுவது கிரிமினல் குற்றமாகவும் முஸ்லிம் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த சில வாரங்களாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக முத்தலாக் கூறுவது அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கூறுகையில், " இந்த மாத தொடக்கத்தில் எனது கணவர் தொலைபேசி வாயிலாக முத்தலாக் கூறினார். என் கணவர் என்னிடம் முத்தலாக் கூறியதை நான் செல்போனில் பதிவு செய்து இருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும். இல்லாவிட்டால் நான் தீக்குளித்து தற்கொலை செய்வேன்" எனத் தெரிவித்தார்.
மற்றொரு சம்பவத்தில் நீதிமன்றத்தில் கணவரும், மனைவியும் விவாகரத்து விஷயமாக முறையிட்ட நிலையில், நீதிமன்றத்தில் வைத்து மனைவிக்கு முஸ்லிம் கணவர் முத்தலாக் கூறியுள்ளார். இது குறித்து அந்தப் பெண், நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார்.
ஹப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண், வரதட்சணை தரவில்லை என்பதற்காக, அவரின் கணவர் முத்தலாக் கூறியுள்ளார்.
முத்தலாக் தடைச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தபோதிலும் கூட முஸ்லிம் பெண்களுக்கு எதிராக முத்தலாக் கூறுவது உ.பி.யில் அதிகரித்து வருகிறது. போலீஸாரின் மெத்தனமான நடவடிக்கைதான் முத்தலாக் அதிகரிப்புக்குக் காரணம் என பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநிலத்தில் முத்தலாக் கூறுவது அதிகரித்து வருவதில் சந்தேகம் ஏதும் இல்லை. சட்டம் நடைமுறைக்கு வந்தபோதிலும் இது அதிகரிப்பதை ஏற்கிறோம்.
ஆனால், முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால்கூட, கணவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று பெண்கள் கூறுகிறார்கள். சிறிது நாட்களில் சமாதானம் ஆவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
அதனால்தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறோம். ஆனால், முத்தலாக் கூறிய கணவனை அழைத்து விசாரித்தால், மிகவும் எளிதாக நான் அவ்வாறு கூறவில்லை என்று வேண்டுமென்றே என் மீது மனைவி புகார் கூறுகிறார் என்று மறுக்கிறார்" எனத் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்