Published : 19 Aug 2019 11:23 AM
Last Updated : 19 Aug 2019 11:23 AM

அயோத்தி ராமர் கோயிலுக்கு நிலமும் கூடவே தங்கச் செங்கல்லும் வழங்கத் தயார்: முகலாய இளவரசர் ஹபீபுதீன் டூஸி

புதுடெல்லி,

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குத் தங்கச் செங்கல் வழங்கத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். முகலாய வம்சாவளியைச் சேர்ந்த இளவரசர் என உரிமை கோரும் ஹபீபுதீன் டூஸி.

அதேவேளையில் பாபர் மசூதி - ராம் ஜென்ம பூமி நிலத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் முகலாய மன்னர் பாபரின் வாரிசு நானே என அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் அளித்த பேட்டியில், "உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை என்னிடம் ஒப்படைத்தால் அதை நானே ராமர் கோயிலுக்குத் தானமாக வழங்குவேன். பாபர் மசூதி அமைக்கப்பட்ட இடத்தில்தான் ராமர் கோயில் இருந்தது என்ற இந்துக்களின் நம்பிக்கையை உணர்வுகளை நான் மதிக்கிறேன்" என்றார்.

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகக் கூறி, கடந்த 1992-ம் ஆண்டு, டிச.6-ல் கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தினசரி நடைபெற்று வருகிறது.

அயோத்தி வழக்கில் வாரிசு தொடர்பான வாதத்தில் தன்னையும் சேர்க்க வேண்டும். ஏனெனில் தானே முகலாய அரசரின் உண்மையான வாரிசு. அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருக்கின்றன என்று டூஸி வலியுறுத்தியுள்ளார். அவரது மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள, தங்கச் செங்கல் ஒன்றை அன்பளிப்பாக வழங்க டூஸி முன்வந்துள்ளார்.

இவர், இதுவரை அயோத்திக்கு மூன்று முறை சென்றிருக்கிறார். அங்குள்ள தற்காலிக ராமர் கோயிலில் வணங்கியிருக்கிறார். கடந்த ஆண்டு ராமர் கோயில் சென்றபோதும் அயோத்தி நிலத்தை கோயிலுக்கே அளித்துவிடுவதாக அவர் கூறியிருந்தார். மேலும், ராமர் கோயில் சிதைக்கப்பட்டதற்கு மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x