

சண்டிகர்
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல சாலைகள் சேதமடைந்துள்ளதால் பலர் சிக்கித் தவிக்கின்றனர்.
முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் ஆகஸ்ட் 18 ம் தேதி, அனைத்து துணை ஆணையர்களுக்கும் நிலைமை குறித்து உன்னிப்பாக விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து இமாச்சலப் பிரதேச முதல்வர் தெரிவித்ததாவது:
"வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் நிலைகள் திடீரென உயரும் வாய்ப்பு எப்போதும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆற்றுப் படுக்கைகளிலிருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடும் மழை காரணமாக மாநிலத்தில் ரூ.490 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. லஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் நேற்றும் இன்று அதிகாலையும் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டதால் பயிர்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.
தலைமைச் செயலாளர் பி.கே. அகர்வால் தி இந்துவிடம் கூறியதாவது:
நிலச்சரிவு காரணமாக சண்டிகர்-மணாலி மற்றும் சிம்லா-கின்னவூர் ஆகிய இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ரோஹ்ரு அருகே, அண்டை மாநிலமான உத்தரகண்ட் பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர் எல்லையில் சிக்கித் தவித்தனர், மேலும், உத்தரகண்ட் அரசாங்கத்திடம் கோரிக்கை வந்ததை அடுத்து அவர்களை மீட்க எங்கள் குழுக்களை அனுப்பியுள்ளோம்.
கடந்த 24 மணி நேரத்தில் பிலாஸ்பூர், சிம்லா மற்றும் சிர்மவூர் மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மிக அதிக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நைனா தேவியில் மாநிலத்திலேயே மிக அதிக அளவில் 360 மி.மீ மழை பதிவாகியுள்ளது,
சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் பிலாஸ்பூர் அருகே வெளியே வர வழியின்றி வாகனங்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும், சண்டிகர்-மணாலி மற்றும் சிம்லா-கின்னூர் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இன்னும் சரியாகவில்லை''
இவ்வாறு இமாச்சல பிரதேச தலைமைச்செயலாளர் தெரிவித்தார்.
தொடர் மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை கூறுகிறது.
சிம்லாவில் 8 பேரும் குலு மற்றும் சிர்மாவூரில் 5 பேரும் மற்றும் உனா மற்றும் லாஹவூல் ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களில் முறையே சோலன் மற்றும் சம்பா ஆகிய பகுதிகளில் தலா இருவரும் உயிரிழந்தனர். இதில் பலரும் நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்துவிழுந்ததில் உயிரிழந்தவர்கள் ஆவர். தவிர, மணிகாரனுக்கும் பார்ஷேனிக்கும் இடையில் பலர்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளதாக இமாச்சலப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.