Published : 18 Aug 2019 07:20 PM
Last Updated : 18 Aug 2019 07:20 PM

ஒரு பெண்ணுக்கு விலை 71 ஆடுகளா? உ.பி.யில் பஞ்சாயத்தில் வித்தியாசமான தீர்ப்பு: குழப்பத்தால் போலீஸில் புகார்

கோரக்பூர்,

மனித உயிர்களுக்கு விலையே நிர்ணயிக்க முடியாத நிலையில், ஒரு பெண்ணுக்கு 71 ஆடுகள் விலை வைத்து உத்தரப்பிரதேச மாநில பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ளி பிப்ரியாச் கிராமத்தில்தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

கோரக்பூர் பிப்ரியாச் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அந்த பெண் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் நடந்ததால், கணவருடன் வாழப் பிடிக்காமல், தனது காதலனைத் தேடிவந்து அவருடன் வாழ்ந்துள்ளார்.

மனைவியைக் காணாமல் அலைந்த கணவர், தனது மனைவி மற்றொருவருடன் வாழ்வதைப் பார்த்து மனைவியின் ஆண் நண்பருடன் சண்டையிட்டுள்ளார். இந்த விவகாரம் கடந்த மாதம் 22-ம் தேதி கிராமப் பஞ்சாயத்துக்கு சென்றது.

அப்போது அந்த பெண்ணிடம் பஞ்சாயத்து தலைவர்கள் விசாரணை நடத்தியபோது, அந்த பெண் தனது கணவருடன் வாழ விருப்பமில்லை தனது காதலருடன்தான் வாழ்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு அந்த பெண்ணின் கணவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து பஞ்சாயத்து தலைவர்கள் அந்த பெண்ணின் காதலரிடம் 71 ஆடுகளை அந்த பெண்ணுக்கு ஈடாக அவரின் கணவருக்கு வழங்கிவிட்டு, பெண்ணுடன் வாழ்க்கையைத் தொடரலாம், அல்லது ஆடுகள் வழங்க முடியாவிட்டால், அந்த பெண்ணை கணவருடன் சேர்ந்து வாழ விட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

அதாவது அந்த பெண்ணுக்கு விலை 71 ஆடுகள்தான் என்று தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்புக்கு அந்த பெண்ணும், கணவரும் , காதலரும் என மூவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி அந்த பெண்ணின் காதலர் தன்னிடம் இருந்த 71 ஆடுகளை அளித்து அந்த பெண்ணை அழைத்து வந்து வாழ்ந்து வருகிறார்.

பிரச்சினை இத்துடன் முடியவில்லை. அந்த பெண்ணின் காதலரிடம் தந்தை புதிய பிரச்சினையை கிளப்பி பஞ்சாயத்தாரிடம் முறையிட்டார்.

காதலரின் தந்தை முறையிடுகையில், தன்னிடம் இருப்பது 142 ஆடுகள்தான், இதில் 71 ஆடுகளை வழங்கிவிட்டு அந்த பெண்ணை தனது மகன் அழைத்து வந்ததில் விருப்பம் இல்லை. அந்த ஆடுகளை திரும்ப வாங்கிக்கொடுங்கள் என்று பஞ்சாயத்தாரிடம் முறையி்ட்டார். ஆனால், பஞ்சாயத்தார் மறுக்கவே, இந்த விவகாரம் குறித்து போலீஸில் புகார் அளித்தார்.

தான் வீட்டில் வைத்திருந்த ஆடுகளை, அந்த பெண்ணின் கணவர் கடத்திச் சென்றுவிட்டதாக காதலரின் தந்தை புகாரில் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால், அந்த பெண்ணோ தனது முடிவில் மாற்றம் ஏதுமின்றி, தொடர்ந்து தனது காதலருடனே வசித்துவருகிறார்.

இதுகுறித்து கோரக்பூர் போலீஸ் நிலைய எஸ்ஐ. அம்பிகா பரத்வாஜ் கூறுகையில், " இந்த புகார் தொடர்பாக மூன்று தரப்பினரையும் அழைத்து விசாரித்து வருகிறோம். அனைத்து தரப்பினரும் சுமூகமாக செல்லும் வகையில் தீர்வை ஏற்படுத்துவோம்" எனத் தெரிவித்தனர்.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x