

புதுடெல்லி
16வது மக்களவை கலைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் 200க்கும் மேற்பட்ட முன்னாள் எம்பிக்கள் டெல்லியின் லுடியன்ஸ் பகுதியில் உள்ள அரசு பங்களாக்களை இன்னமும் காலி செய்யாமல் இருப்பதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்படி, மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் முன்னாள் எம்பிக்கள் அவர்கள் தங்கியிருந்த பங்களாக்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
இரண்டாவது முறையாக மோடி அரசு அமைக்கப்பட்ட பின்னர் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கடந்த மே 25ந் தேதி 16வது மக்களவையைக் கலைத்தார்.
இதுகுறித்து ஓர் உயரதிகாரி பிடிஐயிடம் தெரிவித்ததாவது:
"200 க்கும் மேற்பட்ட முன்னாள் மக்களவை எம்.பி.க்கள் இன்னும் 2014 ல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ பங்களாக்களை காலி செய்யவில்லை. இந்த முன்னாள் எம்.பி.க்கள் லுடியன்ஸ் டெல்லியில் அமைந்துள்ள தங்கள் பங்களாக்களை காலி செய்யாததால், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தற்காலிக தங்குமிடத்தில் தங்கியுள்ளனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கடந்த ஜூன் மாதத்திலிருந்து முழுநேர உத்தியோகபூர்வ பங்களா ஒதுக்கப்படும் வரை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தனர்.
இதனால் புதிய எம்.பிக்களின் தங்குமிட செலவு தாறுமாறாக எகிறியதால் அதைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. உடனடியாக வெஸ்டர்ன் கோர்ட் கட்டிடத்திலும் பல விருந்தினர் மாளிகைகளிலும் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டது.
எனினும் இதில் அவர்கள் தொடர்ந்து தங்க முடியாது.. 17 ஆவது மக்களவையில் முதல் முறையாக கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 260 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர், இதில் கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதி கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் ஸ்மிருதி இரானி, சூஃபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹான்ஸ் மற்றும் பெங்காலி நடிகைகள் மிமி சக்ரவர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜஹான் ருஹி உள்ளிட்ட எம்பிக்கள் ஆவர்.
அவர்கள் தங்களுக்கென்று அதிகாரபூர்வமாக அரசு அளித்துள்ள பங்களாக்களை பழைய எம்பிக்கள் காலி செய்து கொடுத்தால்தான் தற்போது தங்கியுள்ள இடத்திலிருந்து வெளியே வரமுடியும்.