

புதுடெல்லி, பிடிஐ
ஆகஸ்ட் 10ம் தேதி முதல் அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை எந்த வித அதிகாரபூர்வ மருத்துவ அறிக்கையையும் அளிக்காத நிலையில் மேலும் பல தலைவர்கள் அருண் ஜேட்லி நலன் விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் ஞாயிறன்று (18-8-19) அன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
66 வயதாகும் அருண் ஜேட்லி ஆகஸ்ட் 9ம் தேதி மூச்சு விட சிரமம் காரணமாக எய்ம்சில் சேர்க்கப்பட்டார். ஆகஸ்ட் 10ம் தேதிக்குப் பிறகு அருண் ஜேட்லியின் உடல் நிலை குறித்து எய்ம்ஸ் எந்த ஒரு மருத்துவ அறிக்கையையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் பல தலைவர்களும் அவரது உடல் நிலை குறித்து விசாரிக்க டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனைக்கு நேரடியாக வந்தனர்.
பல்துறை நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்கள் ஜேட்லியின் நிலையைக் கண்காணித்து வருகின்றனர். இமாச்சல கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ண கோபால், முன்னாள் சமாஜ்வாதி தலைவர் அமர்சிங் ஆகியோர் மருத்துவமனைக்கு ஞாயிறன்று வந்தனர்.
சனிக்கிழமையன்றும் சில தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.