Published : 18 Aug 2019 05:37 PM
Last Updated : 18 Aug 2019 05:37 PM

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: ட்ரம்பிடம் பேசவும் தயார்- குமாரசாமி ஆவேசம்- காங். இரட்டை நிலை

பெங்களூரு,

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், அதிபர் ட்ரம்பிடம் பேசவும் தயார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சிபிஐ விசாரணையை எதிர்க்கும் நிலையில் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆதரிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் இரு நிலைப்பாடு நிலவுகிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 14 மாதங்களாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா களம் கூட்டணி ஆட்சி நடந்தது. 15 எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்ததால், ஆட்சியைக் தக்கவைக்க முடியாமல் கவிழ்ந்தது. இதுதொடர்பாக 15 எம்எல்ஏக்களும் தகுதி நீ்க்கம் செய்யப்பட்டனர்.

இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஜேடிஎஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்எல்ஏவுமான ஏ.ஹெச். விஸ்வநாத்தும் அடங்குவார். இந்நிலையில் கடந்தவாரம் கர்நாடக அரசியலில் திடீரென ஒரு பரபரப்பு ஏற்படுத்தும் குண்டு போட்டார்.

முதல்வராக குமாரசாமி இருந்தபோது, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட தலைவர்களின் செல்போன்கள், தொலைபேசிகளை ஒட்டுக் கேட்க உத்தரவிட்டார். குறிப்பாக பாஜக தலைவர்கள் ஆப்ரேஷன் கமலாவை யார் செயல்படுத்துகிறார்கள் என்பதை அறியவும் இதை பயன்படுத்தினார் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் பாஜக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு நிலைப்பாட்டுடன் பேச, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா ஒரு நிலைப்பாடும் எடுத்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் கூறுகையில், " தொலைபேசி ஒட்டுக்கேட்பு பொய்யானது. வெறுப்பு அரசியலின் சதிதான் ஒட்டுகேட்பு விவகாரத்தை கையில் எடுத்திருப்பது. கிரிமினல் போல் முதல்வர் எடியூரப்பா செயல்படுகிறார். ஆப்ரேஷன் கமலாவை செயல்படுத்தி அறத்துக்கு மாறாக நடந்து புறவாசல் வழியாக முதல்வராகினார். மோடியின் அரசில் சிபிஐ, பாஜகவுக்கு பணி செய்யும் அமைப்பாக இருக்கிறது " எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் விசாரணை தேவையில்லை என்ற ரீதியில் ட்விட்டரில் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

ஆனால், முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்விட்டரில் கூறுகையில், " தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்தப்படுவதை வரவேற்கிறேன். ஆனால், அரசியல் பழிவாங்கலுக்காக பாஜக சிபிஐ அமைப்பை கடந்த காலங்களில் பயன்படுத்தியது. ஆனால் கர்நாடக தலைவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன் " எனத் தெரிவித்தார்.

இந்த சூழலில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவாகரம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்வர் எடியூரப்பா இன்று அறிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியிடம் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரப்பட உள்ளதாக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு குமாரசாமி ஆவேசமாக பதில் அளித்தார். அவர் கூறுகையில் " எந்த விசாரணை கமிஷன் அமைத்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அது சிபிஐ விசாரணையாக இருந்தாலும் சரி, அல்லது சர்வதேச அளவில் எந்த விசாரணையாக இருந்தாலும் சரி நான் தயார். அதிபர் ட்ரம்பிடம் இருந்து விசாரணை வந்தாலும் நான்பேச தயார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தொலைக்காட்சி சேனல்களின் நோக்கமே மாநில அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், அவர்களின் செயல் வெற்றி பெறாது. நான் இந்த விவகாரத்தில் ஈடுபட்டு இருந்தாலும், அல்லது தொடர்பு இருந்தாலும் நான் பதற்றப்பட்டு இருப்பேன். நான் வெளிப்படையாகவே பேசுகிறேன். என் மீது யாரும் குற்றம்சாட்ட முடியாது " எனத் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x