Published : 18 Aug 2019 04:22 PM
Last Updated : 18 Aug 2019 04:22 PM

மக்களிடம் அண்டவிடாமல் தீவிரவாதிகளை தனிமைப்படுத்துவதுதான் நோக்கம்: காஷ்மீர் டிஜிபி பேட்டி

ஸ்ரீநகர்,

மக்களை தவறான பாதைக்கு தூண்டாமல், அவர்களிடம் அண்டவிடாமல் தீவிரவாதிகளை தனிப்படுத்தி அழுத்தம் கொடுப்பதுதான் ஜம்மு காஷ்மீர் போலீஸாரின் நோக்கம் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக், ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.

இந்த நடைமுறையால் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்கும் பொருட்டு கடந்த 14 நாட்களாக கடும் கட்டுப்பாடுகளை போலீஸார், பாதுகாப்பு படையினர் நடைமுறைப்படுத்தியுள்ளனர். கடந்த இருநாட்கள் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், ஸ்ரீநகரில் இன்று தீடீரென வன்முறைச் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்ததால், மீண்டும் கட்டுப்பாடுகளை பாதுகாப்பு படையினர் விதித்தனர்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக பராமரிக்கவும், கட்டுக்கோப்பாகவும் கொண்டு செல்லவும் ஒத்துழைப்பு அளிக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.போலீஸார், துணை ராணுவப்படை, ராணுவம் ஆகியோரைக் கொண்ட பாதுகாப்புப் படையினர்தங்களின் பணியை சிறப்பாகச் செய்து வருகிறார்கள். மக்களின் ஒத்துழைப்போடு பாதுகாப்பு பணிகள் சிறப்பாக நடக்கின்றன.

மாநிலத்தில் சாதகமான வளர்ச்சியும், மேம்பாடும் ஏற்படவே, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றுதான் நம்புகிறேன். மக்கள் அந்த நல்லனவற்றைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதிகளை வரவிடாமல் தடுப்பதும், மக்களுக்கு மூளைச்சலவை செய்து, தவறான பாதைக்கு அழைத்துச் செல்லவிடாமல் தடுப்பதும் போலீஸாரின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. தீவிரவாதிகளை தொடர்ந்து தனிமைப்படுத்தி, அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து, மக்களைச் சந்திக்க விடாமல் செய்வதுதான் எங்களுடைய பதிலடியாகும். அதை செய்து வருகிறோம். பாதுகாப்பு விஷங்கள் தங்களின் கைகளை மீறிச் செல்லாத வகையில் பாதுகாப்புபடையினர் கட்டுப்கோப்புடன் வைத்துள்ளார்கள்.

இவ்வாறு தில்பாக் சிங் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x