Published : 18 Aug 2019 03:48 PM
Last Updated : 18 Aug 2019 03:48 PM

'பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்' பற்றி மட்டுமே இனி பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

கல்கா (ஹரியானா)

பாகிஸ்தானுடன் இனி பேச்சு வார்த்தை நடந்தால் அது 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு (ஆசாத்) காஷ்மீர்' பற்றி மட்டுமே இருக்கும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானாவில் பாஜகவின் ஜன் ஆசீர்வாத் யாத்திரையை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சண்டிகர் அருகே பஞ்ச்குலா நகரில் நடைபெற்ற இந்த விழாவில் பாஜகவின் மாநில தேர்தல் பொறுப்பாளரும், மத்திய வேளாண் அமைச்சருமான நரேந்திர சிங் தோமர் மற்றும் முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

''ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டது ஆகும்.

இந்தியா தவறு செய்ததாகக் கூறி நமது அண்டை நாடு பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தின் கதவுகளைத் தட்டுகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால், அது இப்போது பாகிஸ்தான் வசமுள்ள 'பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்' பற்றியதாகத்தான் இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவர்கள் நாட்டின்மீது பாலகோட்டை விட பெரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதிலிருந்து பாலகோட்டில் இந்தியா செய்ததை பாகிஸ்தான் பிரதமர் ஒப்புக்கொள்கிறார் என்று தெரிகிறது.''

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

தேர்தல் யாத்திரை

ஹரியானாவின் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களை குறிவைத்து ஜன் ஆசீர்வாத் யாத்திரை நடத்தப்படுகிறது.

மாநிலத்தின் 90 சட்டப் பேரவைத் தொகுதிகள் வழியாக செல்லும் இந்த யாத்திரை வரும் செப்டம்பர் 8ஆம் தேதி ரோஹ்தக்கில் நிறைவடைகிறது.

-ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x