Published : 18 Aug 2019 03:21 PM
Last Updated : 18 Aug 2019 03:21 PM

ஸ்ரீநகரில் பல இடங்களில் திடீர் வன்முறை: மீண்டும் கட்டுப்பாடுகள் அமல், செல்போன் சேவை ரத்து

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீர் வன்முறை சம்பவங்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்ததால் மீண்டும் கட்டுப்பாடுகளை பாதுகாப்பு படையினர் விதித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல் 5 மாவட்டங்களில் மிகக்குறைந்த அலைவரிசை கொண்ட 2ஜி செல்போன் சேவை அனுமதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு வதந்தி்கள் பரப்பப்பட்டதால், அந்த சேவையையும் பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர்.

சவுதிஅரேபியாவில் உள்ள மெக்கா, மெதினாவுக்கு ஹஜ் புனிதப்பயணம் சென்று இன்று ஏராளமான பயணிகள் காஷ்மீருக்கு திரும்பினர். இவர்களை வரவேற்கக்கூட அவர்களின் உறவினர்கள் செல்ல முடியாத அளவுக்கு கட்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் விமான நிலையத்தில் இருந்து அரசுப்பேருந்து மூலம் பாதுகாப்பாக ஹஜ் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக், ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.

இந்த நடைமுறையால் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்கும் பொருட்டு கடந்த 14 நாட்களாக கடும் கட்டுப்பாடுகளை போலீஸார், பாதுகாப்பு படையினர் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த 14 நாட்களாக மாநிலத்தில் செல்போன், தொலைபேசி சேவை, மருத்துவனை, வங்கிகள், அரசு அலுவலகங்கள் முடக்கப்பட்டன, தொலைக்காட்சி சேனல்கள் எதுவும் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. மக்கள் கூட்டமாக வெளியேசெல்லவும், ஒன்று கூடவும் அனுமதிக்கப்படவில்லை.

ஈகைப் பண்டிகைக்கு முன்பாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் கடைகளுக்கும், மசூதிகளுக்கும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அதன்பின் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு தொலைபேசி, செல்போன் இணைப்புகள் 5 மாவட்டங்களுக்கு தரப்பட்டன.

குறிப்பாக ஜம்மு, சம்பா, கதுவா, உதம்பூர், ரேசாய் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை முதல் குறைந்த சக்தி அலைவரிசையான 2 ஜி சேவை மட்டும் தரப்பட்டது. இருப்பினும் யாரேனும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்து இருந்தனர்.

ஆனால், அதையும் மீறி சிலவிஷமிகள் செல்போனில் வதந்திகளையும், சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் வதந்திகளை சிலர் பரப்பியதால், செல்போன் சேவையையும் நேற்று இரவு முதல் போலீஸார் ரத்து செய்தனர்.

இந்நிலையில் ஸ்ரீநகரின் 12-க்கும் மேற்பட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் திடீர் வன்முறைச் சம்பவங்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. வன்முறையாளர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். ஆனால், எத்தனைப் பேர் காயமடைந்தார்கள் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இந்தவன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை வாபஸ் பெற்றும், மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை போஸீலார் கொண்டு வந்தனர். இதனால் மீண்டும் பாதுகாப்புபடையினர் பிடிக்குள் ஸ்ரீநகர் வந்தது.

இதற்கிடையே ஹஜ் புனிதப்பயணம் முடித்துவிட்டு 300 பயணிகள் விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்தனர். ஆனால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால், அவர்களை வரவேற்க அவர்களின் உறவினர்களே வரவில்லை.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஸ்ரீநகரில் ஏற்பட்ட திடீர் வன்முறையால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஹஜ் பயணம்மேற்கொண்டு திரும்பிய பயணிகளை வரவேற்க ஒருவர் மட்டுமே வந்திருந்தார். மற்றவர்கள் யாரும் வரவில்லை. அரசுப்பேருந்து மூலம் பயணிகள் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் " எனத் தெரிவித்தார்.

அரசின் செய்தித்தொடர்பாளர் ரோஹித் கன்சால் கூறுகையில், " காஷ்மீரில் மீண்டும் இயல்புநிலையை திரும்பத் தொடங்கியதால் 35 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஊரடங்கு உத்தரவும், கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. ஆனால், திடீரென பாதுகாப்பு படையினருக்கும், இளைஞர்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் இன்று மோதல் ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன " எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x