Published : 18 Aug 2019 01:34 PM
Last Updated : 18 Aug 2019 01:34 PM

கர்நாடகாவில் தேசியக் கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மின்சாரம் தாக்கி பலியான மாணவர்களின் உடல்கள் வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சி

பெங்களூரு,
கர்நாடக மாிலம், கொப்பல் நகரில் தேசியக் கொடிக்கம்பத்தை அகற்ற முயற்சியில் இறங்கியபோது, மின்சாரம் தாக்கி 5 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரில் அரசுசார்பில் மாணவர்கள் விடுதி இயங்கி வருகிறது. சொந்தமான கட்டிடம் இல்லாததால் தனியார் ஒருவரின் கட்டிடத்தில் மாணவர் விடுதி இயங்கி வருகிறது.

இந்த மாணவர் விடுதியில் கடந்த15-ம் தேதி சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டம் முடிந்தபின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் இரு மாணவர்கள் இன்று ஈடுபட்டனர்.

விடுதியின் முதல் தளத்தில் நின்று கொண்டு இரு மாணவர்களும் கொடிக்கம்பத்தை அகற்றும் போது கொடிக்கம்பம் திடீரென அருகில் இருந்த மின்சாரக் கம்பிமீது சாய்ந்தது. உடனே, அந்த கம்பத்தை பிடித்துக்கொண்டிருந்த இரு மாணவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து அவர்கள் அலறித் துடித்தனர்.

இதைப் பார்த்த மற்ற 3 மாணவர்கள் மின்சாரம் தாக்கி அலறிக்கொண்டிருந்த இரு மாணவர்களையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே 5 மாணவர்களும் பலியானார்கள். இவர்கள் 5 பேரும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள் பெயர் மல்லிகார்ஜுன், குமார், கணேஷ், பசவராஜ், தேவராஜ் எனத் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் தேவராஜ் அர்ஸ் பள்ளியில் படித்து வந்தனர்.

மின்சாரம் தாக்கி மாணவர்கள் பலியான இடத்தை ஆய்வு செய்த போலீஸார் : படவிளக்கம்

இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் மாணவர்கள் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கட்டிடத்தின் உரிமையாளர், விடுதியின் காப்பாளர், மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

மாணவர்கள் இறந்த சம்பவம் குறி்த்து அறிந்த முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, உயிரிழந்த மாணவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், மாணவர்கள் எவ்வாறு மின்சாரம் தாக்கி இறந்தார்கள் என்பது குறித்துவிசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x