Published : 18 Aug 2019 01:32 PM
Last Updated : 18 Aug 2019 01:32 PM

கேரள வெள்ளம்: வளர்ப்பு நாய்களால் காப்பாற்றப்பட்ட 47 ஆடுகள்; தோழமைக்கான சிறந்த பாடம்

மலப்புரம்

கேரளாவில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பெரும் பாதிப்புகள் பேரிழப்புகள் ஏற்பட்டு வரும் வேளையில் மனிதர்கள்மட்டுமல்ல விலங்குகளும் தங்கள் உயிர் அபிமானத்தை வெளிப்படுத்தும் அற்புதங்களை அங்கு காணமுடிகிறது.

மலப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பலத்த மழையின்போது நீலாம்பூருக்கு அருகே உள்ள நெடுங்காயம் பழங்குடியினர் காலனி வெள்ளத்தால் மூழ்கியது.

இங்குள்ள பழங்குடியின குடியிருப்பைச் சேர்ந்த பெண்மணி ஜானகி அம்மாவும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்குள் நீரின் அளவு கழுத்தளவு வரும்போது அங்கிருந்து தப்பித்து சென்றனர். அவர்கள் விட்டுச்சென்றது வீட்டை மட்டுமல்ல வீட்டுக்கு வெளியே பட்டியில் அடைக்கப்பட்ட 47 ஆடுகள், ஐந்து நாய்கள் மற்றும் கோழிக் குஞ்சுகளையும் வெள்ளத்திலேயே விட்டுவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அப்போது நல்லவேளையாக அந்த அவசரத்திலும் அந்த பட்டிகளையும் கூண்டுகளையும் திறந்து விடவேண்டும் என்ற எண்ணம் அப்போது ஜானகியம்மாவுக்கு தோன்றியிருக்கிறது.

முழு காலனியும் நான்கு நாட்கள் தண்ணீருக்கு அடியில் மூழ்கியிருந்த போது, வீட்டில் உள்ள மொத்தம் 5 செல்ல நாய்களும் காலனியை மூழ்கடித்த வெள்ளத்திலிருந்து தப்பித்த வந்ததோடு மட்டுமின்றி சக உயிர்களையும் தங்களோடு காப்பாற்றி கரைசேர்த்தன. தங்களது தோழர்களான மிகப்பெரிய ஆட்டு மந்தைகளைக் காக்கும் தேவதூதர்களாக மாறின.

வெள்ள நீர் உயர்ந்தபோது இந்த ​​நாய்கள் ஆடுகளை மேட்டுப் பாங்கான இடத்திற்கு செல்ல வழிகாட்டின. நீரில் மூழ்காமல் காப்பாற்ற நான்கு ஆட்டுக்குட்டிகளை வாயில் கவ்விக்கொண்டு இந்த செல்ல நாய்கள் மேடான இடங்களுக்கு அவைகளை கொண்டு சென்று கரை சேர்த்தன.

இந்த செல்லப் பிராணிகள் 47 ஆடுகளையும், ஜானகி அம்மாவால் வளர்க்கப்பட்ட கோழிக் குஞ்சுகளையும் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டதோடு ஆடுகள் மற்றும் கோழிகளுடன் நான்கு நாட்கள் ஒன்றாகவே பட்டினி கிடந்தன.

நிவாரண முகாமில் நான்கு நாட்கள் தங்கியிருந்து பின்னர் ஜானகி அம்மா வீடு திரும்பினார். அப்போது ​​நாய்கள், ஆடுகள் மற்றும் கோழிகள் வேறெங்கும் செல்லாமல் அங்கேயே ஒன்றாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவை வாடிப் போயிருந்தன.

இதுகுறித்து ஜானகி அம்மாவின் மகன் காலேஷ் தெரிவிக்கையில், ''எங்களது செல்ல நாய்கள் ஆடுகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் என்ற அளவில்தான் எங்கள் நம்பிக்கை இருந்தது. ஆனால் அதையும் தாண்டி வெள்ளத்தில் மூழ்கிவிடாமல் முடிந்தவரை காப்பாற்றும் பணியையும் செய்துள்ளதன் மூலம் மிகப்பெரிய படிப்பினையை அவைகள் நமக்கு சொல்லித் தந்திருக்கின்றன.'' என்றார்.

பாடம்

பசியால் வாடிக்கிடக்கும் பிராணிகளுக்கு உதவ ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பு முன் வந்தது.

ஹ்யூமேனி சொஸைட்டி இண்டர்நேஷனல் (எச்ஐஎஸ்) சேவைகளின் ஒருங்கிணைப்பாளர் சாலி வர்மா இந்த பிராணிகளின் உடல்நிலையை ஆய்வுசெய்தார். பிராணிகள் மீண்டும் நலம்பெற மனிதாபிமான உதவிகளையும் செய்தார். அமைப்பின் மூலம் ஆடுகளுக்கு 100 கிலோ தீவனங்களையும் நாய்களுக்கு 50 கிலோ அளவிலான உணவுகளையும் அவர் வழங்கினார்.

இதுகுறித்து சாலி வர்மா தெரிவிக்கையில், "அவை அனைத்தும் மிகவும் பசியுடன் இருந்தன. கிட்டத்தட்ட நிலைகுலைந்திருந்தன. ஆயினும்கூட, அவை ஒன்றையொன்று கவனித்துக் கொண்டன, அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சக உயிர்கள் மீது நேசம் செலுத்தும் ஒரு அற்புதமான பார்வை இது. இது தோழமைக்கான முக்கியமான பாடம் ஆகும். நான் அவர்களுக்கு உணவைக் கொண்டு வந்தபோது, ​​ஆடு, கோழி, நாய் ஆகிய மூன்றுவிதமான பிராணிகளும் சுற்றிலும் கூடி ஒரே பாத்திரத்திலிருநது ஆவலுடன் சாப்பிடுவதைக் காண முடிந்தது'' என்றார்.

சுற்றியுள்ள பெரும்பாலான சந்தைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் நாய் உணவு அல்லது ஆட்டுத் தீவனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில்தான் எச்ஐஎஸ் அமைப்பு பழங்குடி குடும்பத்தை விலங்கு உணவுடன் பழங்குடியினர் வீட்டை சென்றடைந்தது,

இதைப் பற்றி மேலும் தெரிவித்த சாலி வர்மா, ''நாங்கள் ஜானகி அம்மாவை அணுகியபோது, ​விலங்குகளுக்கான உணவை மட்டும் ஏற்றுக்கொண்டார். ஆனால் தங்கள் குடும்பத்துக்காக அவர் எதையும் ஏற்க மறுத்துவிட்டார். ''என்றார்.

- அப்துல் லதீஃப் நாஹா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x