சிறு வர்த்தகர்களுக்கான 'பென்ஷன் திட்டம்' திங்கள்கிழமை அறிமுகம்: மத்திய அரசு தகவல் 

பிரதமர் மோடி : கோப்புப்படம்
பிரதமர் மோடி : கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி,

சிறு வர்த்தகர்களுக்கான ஓய்வூதியத் திட்டமான 'பிரதான் மந்திரி லகு வியாபாரி மான்-தான்' நாளை(தி்ங்கள்கிழமை) அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம் முதல் நாளை மாலை சாஃப்ட் லாஞ்ச் எனப்படும் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் இரு முக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. முதல் 100 நாட்களில் ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் 'பிரதான் மந்திரி லகு வியாபாரி மான்-தான் திட்டம்' என்று வர்த்தகர்களுக்காக மத்திய அரசு அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " ஆண்டுக்கு ரூ.1.50 கோடி விற்றுமுதலுக்கும் குறைவாக இருக்கும் வர்த்தகர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியானவர்கள். இந்த திட்டத்தில் சேரும் வர்த்தகர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் சந்தாதாரர்களாகச் சேரும் வர்த்தகர்கள் மாதம் குறிப்பிட்ட தொகையை, தங்கள்ஓய்வூதியத்துக்கு ஏற்றால்போல் செலுத்த வேண்டும். இவர்கள் செலுத்தும் தொகைக்கு ஈடாக அரசும் செலுத்தும். வர்த்தகர்கள் 60 வயதை நிறைவு செய்தபின், அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்த்தில் 25 லட்சம் வர்த்தகர்களை 2019-20-ம் ஆண்டுக்குள் சேர்க்கவும், 2023-2024ம் ஆண்டுக்குள் 2 கோடி வர்த்தகர்களைச் சேர்க்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை இந்த திட்டத்துக்காக ஆன்-லைன் போர்டலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சேர விருப்பம் இருக்கும் வர்த்தகர்கள் பொதுச் சேவை மையத்தை தொடர்பு கொண்டு தங்கள்தேவையான அரசின் திட்டங்களில் சேரமுடியும்" எனத் தெரிவித்தனர்.

அமைப்புசாரா தொழிலில் இருக்கும் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் பிரதமர் மோடி முதல்முறையாக ஆட்சியில் இருந்தபோது அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் வர்த்தகர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது.

அதன்படி பிரதமர் மோடி 2-வது முறையாக ஆட்சியில் அமர்ந்தபின், கடந்த மே 31-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வர்த்தகர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து கடந்த மாதம் 22-ம் தேதி மத்திய தொழிலாளர் துறை அமைச்சகமும் அறிவிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தாமினி நாத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in