Published : 18 Aug 2019 11:20 AM
Last Updated : 18 Aug 2019 11:20 AM

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பார்வை பறிபோன 11 முதியோர்கள்: தனியார் மருத்துவமனை உரிமம் ரத்து 

சம்பந்தப்பட்ட மருத்துவமனை

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி இந்த மருத்துவமனையில் கண்புரை நோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட வயதான 11 பேரின் பார்வை பறிபோனதையடுத்து மத்தியப் பிரதேச அரசு இந்த கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் இதனைச் சரிசெய்ய நடவடிக்கையும் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.50,000 நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாவட்ட ஆட்சியர் லோகேஷ் குமார் ஜாதவ் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் தெரிவிக்கும் போது பார்வை முழுதும் போகவில்லை, பார்வை மங்கலாகி தெளிவற்ற பார்வையாக உள்ளது அவர்கள் நகரத்தின் இன்னொரு கண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பார்வையை சரிசெய்யும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது, ஆனால் இப்போதைக்கு இது எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை, என்றார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் பார்வையிழப்பு கட்டுப்பாட்டு தேசியத் திட்டத்தின் கீழ் 45 வயது முதல் 85 வயதுடையோர் வரை 14 பேருக்கு ஆகஸ்ட் 8ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. பிற்பாடு இதில் 11 பேர் பார்வை சரியாகத் தெரியவில்லை படலமாக இருக்கிறது என்று புகார் தெரிவித்தனர். இவர்கள் சோயித்ராம் ரிசர்ட் செண்டருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அந்த தனியார் மருத்துவமனை மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 8 வரை மொத்தம் 386 கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளது. இப்போது இந்த பார்வையிழப்பை அடுத்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் அடிப்படையில் பணம் வழங்கப்படும் என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு அதிகாரி.

தனியார் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் மூடப்பட்டது, இந்த அலட்சியத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிது பத்வாரி என்ற அமைச்சர் தெரிவித்தார்.

டாக்டர் சுதிர் மஹாசப்தே மாவட்ட பார்வையிழப்பு கட்டுப்பாட்டு சங்கத்துக்கு இது பற்றி எழுதித் தெரிவித்ததையடுத்தே இது வெளிஉலகிற்கு தெரியவந்துள்ளது.

இது இந்த மருத்துவமனைக்கு முதல் முறையல்ல, 2010-ம் ஆண்டே கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 18 பேருக்கு பார்வை பறிபோன கொடூரம் நடந்துள்ளது. 6 மாத கால லைசன்ஸ் ரத்துக்குப் பிறகு மீண்டும் இந்த அறுவை சிகிச்சைகள் அங்கு ‘ஜோர்’ ஆக நடைபெற்று வருவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

-சித்தார்த் யாதவ், தி இந்து,ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x