

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட முக்கிய நகரங் களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப் பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் நாட்டின் முக்கிய நகரங்களை தகர்க்க சதி திட்டம் வகுத்துள்ளனர். அதிலும் கர்நாடகாவில் பெங் களூரு, மைசூரு மாநகரங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பெங்களூரு, மைசூரு உட்பட மாநிலம் முழுவதும் பாது காப்பு ஏற்பாடுகளை மேற்கொள் ளுமாறு காவல் துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் கர்நாடகாவில் வெளிநாட்டி னர் அதிகமாக குவியும் பெங்களூரு, மைசூரு அரண்மனை, ஹம்பி உள்ளிட்ட சுற்றுலா நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதி சோதனை, வாகன சோதனை, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் கூறியதாவது:
உளவுத்துறை எச்சரிக்கையின் படி எவ்வித அசம்பாவித சம்பவங் களும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பெங்களூரு சர்வதேச விமான நிலையம், பழைய விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டும் தீவிர கண்காணிப்பும் நடைபெற்று வருகிறது. விதானசவுதா, உயர் நீதி மன்றம், ஆளுநர் மாளிகை, லால் பார்க், கப்பன் பார்க், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்கள் போலீ ஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அங்கு தீவிர சோதனைக்கு பிறகே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாநில போலீஸார் மட்டுமல்லாமல் மத்திய துணை ராணுவ படை யினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிசிடிவி கண்காணிப்பு, வாகன ரோந்து, சோதனை சாவடி ஆகிய வற்றின் மூலம் 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் சாதாரண உடை யில் நடமாடும் போலீஸார் சந்தேகத் துக்கு இடமானவர்களை பிடித்து விசாரிக்கின்றனர். அதே போல சில செல்போன் அழைப்புகளும் கண்காணிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பினால் மக்கள் பீதியடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.