

பத்தனம்திட்டா
சபரிமலை ஐயப்பன் கோயிலின் அடுத்த மேல்சாந்தியாக ஏ.கே.சுதிர் நம்பூதிரி தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலை யில் உள்ள ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகாபுரம் தேவி கோயிலுக்கான மேல்சாந்திகளின் (தலைமை பூசாரி) பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது.
இதையடுத்து, புதிய மேல்சாந்தி களை குலுக்கல் முறையில் தேர்வு செய்வதற்கான நிகழ்ச்சி அந்தந்த கோயில்களில் நேற்று காலையில் நடைபெற்றது.
முன்னதாக, இந்த நடைமுறை களை கண்காணிப்பதற்காக எம்.மனோஜை சிறப்பு ஆணைய ராக கேரள உயர் நீதிமன்றம் நியமித்திருந்தது. இந்நிகழ்ச்சியில், ஐயப்பன் கோயில் மேல்சாந்தி யாக மலப்புரம் மாவட்டம் திருநாவ யாவைச் சேர்ந்த சுதிர் நம்பூதிரியும் தேவி கோயிலின் மேல்சாந்தியாக எர்ணாகுளத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர் களுக்கு இப்போதைய மேல்சாந்தி வி.என்.வாசுதேவன் நம்பூதிரி வழிகாட்டுதல் பேரில் ஒரு மாதம் பயிற்சி வழங்கப்படும்.
இதையடுத்து, இருவரும் நவம்பர் 16-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வர். இவர்கள் ஓராண்டுக்கு இப்பதவியில் நீடிப்பர்.
இந்த கோயில்களை நிர்வகிக் கும் திருவாங்கூர் தேவசம் வாரிய தலைவர் ஏ.பத்மகுமார், உறுப்பினர்கள் கே.பி.சங்கரதாஸ் மற்றும் என்.விஜயகுமார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக குலுக்கல் பெட்டிகளுக்கு கோயில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு மோகனரரு பாரம்பரிய முறைப்படி பூஜை செய்தார். பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மாதவ் கே.வர்மா மற்றும் காஞ்சனா கே.வர்மா ஆகியோர் 2 குலுக்கல் பெட்டிகளில் இருந்து தலா ஒருவரின் பெயரை தேர்ந்தெடுத்தனர்.