Published : 17 Aug 2019 05:43 PM
Last Updated : 17 Aug 2019 05:43 PM

'பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' - சம்பா பகுதி இஸ்லாமியர்கள் வரவேற்பு

சம்பா (காஷ்மீர்)

காஷ்மீரின் எல்லை மாவட்டமான சம்பாவில் வசிக்கும் 21 ஆயிரம் இஸ்லாமியக் குடும்பங்கள், மோடி நடவடிக்கையால் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

மேற்கு பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகள், 1947-ல் பிரிவினையால் தூண்டப்பட்ட மத வன்முறைகளால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியக் குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பிச் சென்று, எல்லை மாவட்டமான சம்பாவில் குடியேறினர். பாகிஸ்தான் அகதிகள் என்பதால் அவர்களுக்கு அரசு வேலை, கல்லூரிகளில் சேர்க்கை மற்றும் உதவித்தொகை, நலத்திட்டங்கள் மற்றும் சொந்தமாக நிலம் வாங்கும் உரிமை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.

70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிற்குள் நாடற்றவர்களாகவே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மத்திய அரசு, ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளாக அமலில் இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக அறிவித்த பின்னர் தற்போது '' மோடி நடவடிக்கையால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்'' என்று அம்மக்கள் கூறியுள்ளனர்.

எதிர்காலத்தில் கண்ணியமான வாழ்க்கையை எதிர்பார்க்கும் இந்தக் குடும்பங்கள், காஷ்மீர் பிரச்சினையில் ஒரு சரியான முடிவை எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டுகிறார்கள். இது மத்தியில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் எடுக்க முடியாத ஒரு முடிவு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டிமா சந்த் என்பவர் ஏஎன்ஐயிடம் தெரிவித்ததாவது:

“பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் எங்களை அங்கு வாழவிடவில்லை. அதனால்தான் நாங்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தோம். ஆனால் இங்கும் அதே நிலைதான் நீடித்தது. எங்கள் குழந்தைகள் கல்வி நிறுவனங்களில் சேர அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் அரசாங்க வேலைகளை கேட்கச் சென்றால், குடியிருப்புச் சான்றிதழ்களை வழங்குமாறு கேட்கிறார்கள்.

சான்றிதழைப் பெறுவதற்காக நான் தாலுக்கா அலுவலகம் செல்லும்போது, நாங்கள் மேற்கு பாகிஸ்தானியர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் எங்குதான் செல்வது?

2008 -ம் ஆண்டில், நாங்கள் எங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்காக டெல்லிக்குச் சென்றோம். ஆரம்பத்தில் அவர்கள் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து பல நாட்கள் அங்கேயே தங்கியிருந்ததால் அவர்களைச் சந்திக்க முடிந்தது.

உரிமைகள் குறித்த எங்கள் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அவர்கள் சொன்னார்கள். அவர்கள் இன்னமும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதைய 2008 ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுக்கான எங்கள் மூத்த பிரதிநிதிகள் எங்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை.

ஆனால், பின்னர் வந்த மோடி அரசு தற்போது மீண்டும் பொறுப்பேற்ற பிறகு 370-வது பிரிவை ரத்து செய்வதற்கும், மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கும் மத்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மோடி ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளார்”.

இவ்வாறு டிமா சந்த் தெரிவித்தார்.

கல்வி மற்றும் அரசு வேலைகள் எங்களுடைய முக்கியத் தேவைகள் என்று அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கும் ஒரு பெண், மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்தபோது, ''இந்த நடவடிக்கை எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக இளைஞர்களுக்கு உயர் படிப்பைத் தொடரவும், புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் வேலைவாய்ப்பைப் பெறவும் நிச்சயம் உதவும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x