Published : 17 Aug 2019 05:21 PM
Last Updated : 17 Aug 2019 05:21 PM

பிஹார் சுயேச்சை எம்.எல்.ஏ ஆனந்த் சிங் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி, வெடிகுண்டுகள்

பிஹார் மாநிலத்தின் சுயேச்சை எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கின் பரம்பரை வீட்டிலிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் சில வெடிபொருட்கள், வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றியது பரபரப்பாகியுள்ளது.

பாட்னா மாவட்டத்தில் உள்ள மோகமா தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ. ஆவார் ஆனந்த் சிங்.

ஆனால் இந்த ஆயுதங்கள் வெடிபொருட்களை போலீசார்தான் கொண்டு வைத்தனர் என்றும் தான் அந்த வீட்டுக்கு கடந்த 14 ஆண்டுகளாகப் போகவேயில்லை என்றும் மறுத்துள்ளார் ஆனந்த் சிங்.

ஆனால் பாட்னா போலீஸ் உயரதிகாரி, கந்தேஷ் குமார் மிஸ்ரா கூறும்போது, “குறிப்பிட்ட துப்பு கிடைத்ததன் பேரில் ஆனந்த் சிங் வீட்டில் ரெய்டு நடத்தினோம் ஏ.கே.47 துப்பாக்கியும் சில வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன” என்றார்.

மெட்டல் டிடெக்டர் கண்டுபிடிக்க முடியாவண்ணம் கார்பன் காகிதத்தில் சுற்றப்பட்டு ஏ.கே.47 துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது என்கிறார் அவர். “எக்ஸ்ரே இயந்திரம் கூட கார்பன் பேப்பரில் மறைத்து வைத்த பொருளை கண்டுபிடிக்காது, வெடிகுண்டு செயலிழப்பு குழுவும் இடத்துக்கு வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன” என்றார் மிஸ்ரா.

மினி கவர்ன்மெண்ட் என்று இவர் பகுதியை அழைக்கப்படுவதுண்டு, கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இவர் மனைவி நீலம் தேவி போட்டியிட்டார். ஆனால் ஐக்கிய ஜனதாதள வேட்பாளரிடம் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நீலம் தேவி தோற்றார்.

தன்னை ஐக்கிய ஜனதாதளம் வேண்டுமென்றே பல சிக்கல்களில் மாட்டி விடுகிறது என்று கூறும் ஆனந்த் சிங், “முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கமான ஐக்கிய ஜனதாதளத் தலைவரின் மகள் இப்பகுதியில் போலீஸ் உயரதிகாரியாக இருக்கிறார். இவரை வைத்துத்தான் என் மீது பொய்யான வழக்குகள் போட திட்டமிடுகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

கூலிப்படையுடன் இவர் பேசியதான வீடியோ ஒன்று வைரலானது, ஆனால் இந்த வழக்கில் கூட தானாகவேதான் போலீஸ் நிலையம் சென்றதாகக் கூறுகிறார் ஆனந்த் சிங். இவர் முன்னாள் பிரபல தாதா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாஜக-ஜேடியு கூட்டணித் தலைவர்கள் இதனை மறுத்து, ‘ஆனந்த் சிங் எப்படிப்பட்டவர் என்பது ஊரறிந்த விஷயம், ஆகவேதான் போலீஸார் ஒரு குறிப்பிட்ட துப்பின் அடிப்படையில் ரெய்டு மேற்கொண்டனர்’ என்று கூறுகின்றனர்.

-சிறப்புச் செய்தியாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x