Published : 17 Aug 2019 05:21 PM
Last Updated : 17 Aug 2019 05:21 PM

அணு ஆயுதக் கொள்கை குறித்த ராஜ்நாத் சிங்கின் பேச்சு பொறுப்பற்றது: பாகிஸ்தான் தாக்கு

அணு ஆயுதக் கொள்கை குறித்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு பொறுப்பற்றது என விமர்சித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் எதிரி நாடுகள் பயன்படுத்தினால் பதில் தாக்குதலுக்கு மட்டுமே அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என்பதே இதுவரை இந்தியாவின் கொள்கையாக இருந்தது. ஆனால், எதிர்காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) ராஜ்நாத் சிங்கின் கருத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர். அதில், "இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அணு ஆயுதக் கொள்கை குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் பொறுப்பற்றவை. அந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ள நேரமும் சூழலும்கூட பொறுப்பின்மையையே வெளிப்படுத்துகிறது. அது இந்தியாவின் போர் விருப்பப் போக்கையே காட்டுகிறது.

மேலும் நோ ஃபர்ஸ்ட் யூஸ் (NFU) அதாவது அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாடு எவ்வளவு போலியானது என்பதையே அந்தப் பேச்சு உணர்த்துகிறது. நாங்கள் இதுவரை இந்தியாவின் அந்தக் கொள்கையை நம்பியதே இல்லை.

இதற்காகத்தான் தெற்காசியாவில் அணு ஆயுதப் பயன்பாடு தொடர்பாக கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் எப்போதுமே வலியுறுத்தி வருகிறது. அது வகுக்கப்படாத நிலையிலும் பாகிஸ்தான் தொடர்ந்து அணுசக்திப் பயன்பாட்டில் நம்பகத்தன்மை வாய்ந்த சுயக் கட்டுப்பாட்டைப் பின்பற்றும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x