

ஏப்ரல் 1ம் தேதி பேலுகான் ஜெய்பூர் சந்தையிலிருந்து பசுக்களை வாங்கிக் கொண்டு வாகனத்தில் வரும்போது சிலநபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி 2 நாட்கள் கழித்து மரணமடைந்தார், இந்த வழக்கு தொடர்பாக அல்வார் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரை விடுவித்தது.
அதாவது சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக்கி நீதிபதி 6 பேரையும் விடுதலை செய்துள்ளார். இதில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் சிறார் என்பதால் அது சிறார் நீதிவாரியத்தில் விசாரணையில் உள்ளது.
பேலு கான் வழக்கில் அவரது குடும்பத்திற்கு சட்ட உதவி வழங்கிய காசிம் கான் என்ற வழக்கறிஞர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறும்போது, “ஏற்கெனவே இந்த வழக்கு மோசமாகக் கையாளப்பட்ட நிலையில், பேலு கான் இறந்தது எதனால் என்பதில் குழப்பம் ஏற்பட்டது, இதனால் சந்தேகத்தின் பலன் குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதகமானது. மேலும் பேலு கான் அளித்த மரண வாக்குமூலத்தில் 6 பேர்களை குற்றவாளிகளாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பேலு கான் மகன்களின் வாக்குமூலத்தில் இந்த 6 பேர் பெயர் இல்லை. இதுதான் வழக்கைப் பலவீனமாக்கியது” என்றார்.
மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தாக்குதலில் ஏற்பட்ட காயத்தினால் மரணம் என்று குறிப்பிடப்பட, கைலாஷ் மருத்துவமனை மருத்துவர்கள் இருதய நோயால் மரணமடைந்ததாக அறிக்கை அளித்தனர். மருத்துவ அறிக்கை இரண்டும் வேறு வேறு காரணங்களைக் கூறியதாலும் மரணம் நிகழ்ந்தது எதனால் என்ற குழப்பத்தை அதிகரிக்க ‘சந்தேகத்தின் பலன்’ இன்னும் இறுக்கமடைந்தது.
மேலும் பேலு கானுடன் தாக்கப்பட்ட மற்ற நால்வரை விசாரித்த போது விசாரணையில் இந்த நால்வரும் பேலு கான் தன்னைத் தாக்கியதாகக் குறிப்பிட்ட 6 பேர் பற்றி குறிப்பிடவில்லை. இது ஏன் என்று இந்த நால்வரும் கூறும்போது, போலீஸ் வேண்டுமென்றே இந்த 6 பேர் பெயரையும் குறிப்பிடாமல் விட்டனர் என்று தெரிவித்தனர்.
தாக்கப்பட்ட இடத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இல்லை அவர்கள் அப்போது தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 4 கிமீ தொலைவில் இருந்த பசுக்கூடத்தில் இருந்தாதாக பசுக்கூட ஊழியர்களின் வாக்குமூலமும் சேகரிக்கப்பட்டன. இதையும் கோர்ட் கணக்கில் எடுத்து கொண்டது.
என்று காசிம் கான் கூறியுள்ளார்.