Published : 17 Aug 2019 03:21 PM
Last Updated : 17 Aug 2019 03:21 PM

சுதந்திர தின விழாவில் பரிசு வாங்கிய தெலுங்கானா காவலர் அடுத்தநாளே லஞ்ச வழக்கில் கைதானார் 

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் சுதந்திர தின விழாவில் சிறந்த கான்ஸ்ட்பிள் விருது வாங்கிய மறுநாளே ஊழல் வழக்கில் கைதானார்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் திருப்பதி ரெட்டி. இவர் மெஹபூப் நகர் ஐ டவுன் காவல் நிலையத்தில் காவலராக இருக்கிறார்.
சிறப்பாக பணியாற்றியதற்காக சுதந்திர தினத்தன்று இவர் கலால் வரித் துறை அமைச்சர் வி.ஸ்ரீனிவாஸ் கரங்களில் விருது பெற்றார். மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அதே போலீஸ்காரர் அடுத்த நாளே லஞ்ச ஊழல் வழக்கில் கைதான சம்பவம் நடந்துள்ளது. புகார் பதியாமல் இருக்க ஒருவரிடமிருந்து ரூ.17000 லஞ்சமாக பெற்றபோது திருப்பதி ரெட்டி கைதானார்.

மணல் லாரி கொண்டு செல்ல லஞ்சம்..

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயரதிகாரிகள் தரப்பில், ஐடவுன் காவல் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் திருப்பதி ரெட்டி ரமேஷ் என்ற நபரிடம் லஞ்சம் பெற்றுள்ளார்.

ரமேஷ் தனது மணல் லாரியை கொண்டு செல்ல போதிய ஆவணம் வைத்திருந்தும் அவரை திருப்பதி ரெட்டி லஞ்சம் கேட்டு நச்சரித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்காவிட்டால் புகார் பதிவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் தன் மீது போலி புகார் பதியப்படாமல் தடுக்க ரமேஷ் லஞ்சம் தர ஒப்புக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது திருப்பதி ரெட்டி கையும் களவுமாக சிக்கினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக சிறந்த தாசில்தாராக தேர்வான அதிகாரி வீட்டில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ரூ.93 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 400 கிராம் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x