

ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லையருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது.
மேலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பேருந்து போக்குவரத்தையும் நிறுத்தியது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரி சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தால் இருநாடுகள் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் இன்று திடீரென தாக்குதல் நடத்தியது. உடனடியாக இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் சந்திப் தாபா உயிரிழந்தார். இதையடுத்து அந்த பகுதிக்கு கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.