Published : 17 Aug 2019 01:31 PM
Last Updated : 17 Aug 2019 01:31 PM

அபராதம் செலுத்த இயலாத பரிதாபம்: மனைவியின் ஈமச்சடங்கை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் ஒடிசா இளைஞர்

புவனேஸ்வர்

இறந்த பெண் ஒருவரின் உடலை மூன்று நாட்களாகியும் அடக்கம் செய்ய சொந்த சமூகத்தினர் ஒத்துழைக்க மறுத்ததால் பெண்ணின் உடலை போலீஸார் எடுத்துச் சென்ற பரிதாப நிகழ்வு ஒடிசாவில் நேற்று நடந்தது.

உலகம் எவ்வளவு மாறினாலும் இன்னும் சில இடங்களில் பழமையின் தீவிரம் மாறாத நிலையில்தான் உள்ளது என்பதற்கு உதாரணமாக ஒடிசாவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

மயூன்பஞ்ச் மாவட்டத்தில் குலியானா வட்டாரம் சாந்தால் பழங்குடியினரின் கிராமங்கள் நிறைந்த பகுதி. இதன் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது குச்சேயி கிராமம். இங்கு வசிக்கும் அனைவரும் பழங்குடியின மக்கள். இவர்கள் தீவிர கட்டுப்பாடுகளைக் கடைபிடிப்பவர்கள்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தரா சோரன். இவருடைய மனைவி பார்வதி, உடல்நிலை சரியில்லாமல் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். மனைவியின் இறுதிச்சடங்கை சோரன் நடத்த முயல, அவர்கள் சமூகம் விதித்த தண்டனை காரணமாக நடத்த முடியாமல் போனது.

சோரனின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் வேறு பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஒரு ஆடு, மூன்று கோழிகள், 15 கிலோ அரிசி மற்றும் இரண்டு குடம் நிறைய நாட்டு மதுபானங்கள் தான் அந்த அபராதம்.

சோரனின் சமூகத்தில் கடுமையான பழக்கவழக்கங்கள் இன்னும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள அபராதத்தைச் செலுத்தினால்தான் இறுதிச்சடங்கில் சமூக மக்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துவிட்டனர்.

இதேபோன்று மற்றொரு பிரச்சினையிலும் சோரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தந்தையைப் போலவே மகனும் தானே முடிவெடுத்து வேறு இனப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் இவரும் சாந்தால் பழங்குடியினரின் பாரம்பரியத்தை மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது, மணமகனின் குடும்பம் திருமண
நேரத்தில் மணமகளின் குடும்பத்திற்கு ஒரு மாடு அல்லது காளையைப் பரிசாக வழங்க வேண்டும்.

அவருடையது காதல் திருமணம் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் அதை ஒரு பிரச்சினையாக ஆக்கவில்லை. ஆனால் சமூக சட்டம் அதை விடவில்லை. அதற்கும் சேர்த்து அபராதத்தை சோரன் தலைமீது சுமத்தியது. ஆனால் அந்த அபராதத்தைக்கூட செலுத்த முடியாத நிலையில் சோரனின் குடும்பம் வறுமையில் இருந்தது. அபராதம் அவருக்கு மிகப்பெரிய சுமையாக இருந்தது.

சோரன், ஒரு தினக்கூலியாகப் பணியாற்றி வருபவர். அனைத்து நாட்களும் வேலை கிடைக்கும் என்று கூறமுடியாது. தனது மனைவியின் குடும்பத்தார் உதவிகள் மூலமாகத்தான் அவர் வாழ வேண்டி இருந்தது. அதனால் அபராதம் செலுத்த முடியாத நிலையில் தனது இயலாமையைச் சொல்லி இறுதிச்சடங்கு நடத்த தனது சமூகத்தாரிடம் சோரன் அனுமதி கேட்டுள்ளார்.

"என் மனைவியின் இறுதிச்சடங்கை நிறைவேற்ற உதவுங்கள். நான் அபராதத்தை பின்னர் நிச்சயம் செலுத்துகிறேன் என்று பலமுறை உறுதியளித்த போதிலும், சமூக உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்" என்று சோரன் தெரிவித்தார்.

இறுதிச்சடங்கு செய்ய சமூகத்தினர் மறுத்ததால் விஷயம் காவல்துறைக்குச் சென்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பிரச்சினையை தீர்க்க பேசியும் கிராமத்தினர் ஒத்துவராததால் பிணத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாதாரண அபராதத் தொகையைச் செலுத்த இயலாத காரணத்தால் மனைவியின் இறுதிச்சடங்கை நிறைவேற்ற முடியாமல் பிணத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை சோரனுக்கு ஏற்பட்டது.

அமைச்சருக்கும் இதே அபராதம்தான்

ஏற்கெனவே, ஒடிசா அமைச்சருக்கும் இதே நிலை ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒடிசாவின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுதம் மார்ண்டி, இவரும் அதே பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது மகள் கடந்த 2016-ம் ஆண்டில் தம் இனத்தை விட்டு வெளியே வேறொரு நபரைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் அவரது சமூக மக்கள் கோபம் அடைந்து அபராதம் விதித்தனர்.

அபராதம் செலுத்தாத நிலையில் அமைச்சரும் தனது சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

- சத்யசுந்தர் பாரிக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x