Published : 17 Aug 2019 12:24 PM
Last Updated : 17 Aug 2019 12:24 PM

ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்திய இந்தியா: ராஜதந்திர நடவடிக்கையால் வெற்றி

ஐஏஎன்எஸ்

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பி உலகின் கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் மேற்கொண்ட திட்டத்தை இந்திய ராஜ தந்திர நடவடிக்கைகள் மூலம் தகர்த்துள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் பாகிஸ்தானின் முயற்சி பெரும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் தூதரக உறவு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுமட்டுமின்றி இந்த பிரச்சினையில் உலக நாடுகளின் ஆதரவை தேடும் முயற்சியிலும் பாகிஸ்தான் ஈடுபட்டது. சீனாவை தவிர, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரசு அமீரகம் என பல நாடுகளும் இந்தியாவின் தரப்புக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான சீனாவும் ஆதரவு தெரிவித்தது.

இதன்பேரில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஆலோசனை நடத்தியது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத் தில் சீனா உள்ளிட்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் கலந்து கொண்டன.

ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
ஆனால் கூட்டத்தில் நடந்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அனுதாபம் தேட முயன்ற பாகிஸ்தான்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடும் முன்பாக நேற்று காலை முதலே பாகிஸ்தான் தரப்பில் பல்வேறு நாடுகளின் ஐ.நா. பிரதிநிதிகளிடம் பேசப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் மட்டுமின்றி தற்காலிக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடமும் பாகிஸ்தான் சிறப்பு தூதர் தங்கள் தரப்பு வாதங்களை தெரிவித்துள்ளார்.

அதேசமயம் ஐ.நா.வுக்காக இந்தியாவின் நிரந்தர தூதர் செய்யது அக்பருதீன் நேற்று காலை முதலே மற்ற நாடுகளின் பிரதிநிதிகளிடம் பேசினார். இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்நாட்டு விஷயம் என்பதுடன், காஷ்மீரில் தொடர்ந்து அமைதி நிலைநாட்டப்பட்டு வருவதையும் எடுத்துரைத்துள்ளார்.

பாகிஸ்தானின் கோரிக்கைக்கு சீனா மட்டுமே தொடக்கம் முதல் ஆதரவு தெரிவித்தது. அமெரிக்காவின் அனுதாபத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் தீவிரமாக இருந்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடைசி முயற்சியாக பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தொடங்கும் முன்பாக பேசினார்.

அப்போது பாகிஸ்தான் பழிவாங்கப்படுவதாகவும், இந்தியா அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் புகார் கூறினார். ஆனால் இந்த பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என ட்ரம்ப் பதில் கூறியுள்ளார். இருநாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக முன்பு அறிவித்த ட்ரம்ப் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

தன் மூலம் காஷ்மீர் விவகாரம் இருநாடுகளின் தனிப்பட்ட பிரச்சினை எனவும், சர்வதேச பிரச்சினை அல்ல எனவும் அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. இதன் பிறகு நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை

இதுபற்றி அக்பரூதீன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘காஷ்மீரில் இயல்புநிலை திரும்பவும், வளர்ச்சியை ஏற்படுத்துவும் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என பாதுகாப்பு கவுன்சில் விருப்பம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது’’ எனக் கூறினார்.

இதுமட்டுமின்றி காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் அதனை சகித்துக் கொள்ள முடியாமல் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருவதையும், தீவிரவாதிகள் தூண்டிவிடப்படுவதையும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளிடம் இந்தியா தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.

(தமிழில் நெல்லை ஜெனா)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x