

ஜம்மு - காஷ்மீரின் 5 மாவட்டங்களில் மீண்டும் இன்று (சனிக்கிழமை) காலை முதல் தொலைபேசி இணைய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 5-ம் தேதி, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி, மொபைல் சேவை, இணையதள சேவை முடக்கப்பட்டன.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் படிப்படியாக தடைகளைத் தளர்த்த அரசாங்கம் நேற்று (வெள்ளிக்கிழமை) முடிவு செய்தது.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதன்மைச் செயலாளர் பிவிஆர் சுப்ரமண்யம் கூறும்போது, "ஜம்மு காஷ்மீரில் படிப்படியாக தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்படும். தீவிரவாத குழுக்களின் அச்சுறுத்தலைக் கணக்கில் கொண்டே படிப்படியாக இணைய சேவை வழங்கப்படும். தடுப்புக் காவல்களையும் மறு ஆய்வு செய்து வருகிறோம். சட்டம் ஒழுங்கு நிலவரத்துக்கு ஏற்ப உரிய முடிவு எட்டப்படும்" எனக் கூறியிருந்தார்.
முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட 400-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் காவலில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் ஜம்மு, ரேசாய், சம்பா, கதுவா, உத்தம்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் தொலைபேசி, மொபைல் சேவை, 2ஜி மொபைல் இணையதள சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 17 தொலைதொடர்பு மையங்களில் லேண்ட்லைன் தொலைபேசி சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
மத்திய காஷ்மீரில் புட்காம், சோனம்மார்க், மனிகம் ஆகிய பகுதிகளிலும், வடக்கு காஷ்மீரில் குரேஸ், டங்மார்க், உரி, கேரன், டங்தார் ஆகிய பகுதிகளிலும் தரைவழி தொலைபேசி சேவை மீண்டும் தொடங்கியுள்ளன.
தொடர்ந்து தலைவர்கள் விடுதலையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.