Published : 17 Aug 2019 10:34 AM
Last Updated : 17 Aug 2019 10:34 AM

காஷ்மீர் உள்நாட்டு பிரச்சினை; தீவிரவாதத்தை நிறுத்தாத வரையில் பேச்சுவார்த்தை இல்லை: பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் பதில்

வாஷிங்டன்

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்திக் கொள்ளாத வரையில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என இந்தியாவுக்காக ஐ.நா. தூதர் செய்யது அக்பரூதீன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது. இதனால் இருநாடுகள் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.

காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான சீனாவும் ஆதரவு தெரிவித்தது.

இதன்பேரில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஆலோசனை நடத்தியது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத் தில் சீனா உள்ளிட்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் கலந்து கொண்டன.

ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

இந்தநிலையில் கூட்டத்துக்கு பிறகு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் செய்யது அக்பரூதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியாவின் உள்நாட்டு விஷயம். இதில் மற்ற நாடுகள் எதுவும் தலையிட வேண்டிய அவசியமில்லை. இதனை பற்றி சர்வதேச அமைப்புகள் விவாதிக்கவும் தேவையில்லை. காஷ்மீரில் நிர்வாக அமைப்புகளில் மாற்றம் செய்வது இந்தியாவின் தனிப்பட்ட உரிமை. மக்களின் நலனுக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் உரிமை இந்தியாவுக்கு எப்போதும் உண்டு.

இந்த விவகாரத்தை பாகிஸ்தானும், சீனாவும் மீண்டும் மீண்டும் எழுப்பி வருவது கண்டிக்கத்தக்கது.
காஷ்மீரில் நிலைமை பாகிஸ்தான் தவறாக சித்திரிக்க முயலுகிறது. இதனை அனுமதிக்க முடியாது.

காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டிவிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாத வரையில் அந்நாட்டுடன் பேச்சவார்த்தைக்கு வாய்ப்பில்லை. காஷ்மீரில் நிலைமை மேம்பட்டு இருப்பதற்கு பாதுகாப்பு கவுன்சிலில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x