Published : 17 Aug 2019 07:16 AM
Last Updated : 17 Aug 2019 07:16 AM

உயிரை பணயம் வைத்து வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன்: கர்நாடக அரசின் வீரதீர விருதுக்கு பரிந்துரை

பெங்களூரு

கர்நாடகாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு தன் உயிரை பணயம் வைத்து வழிகாட்டிய 12 வயது சிறுவனுக்கு வீரதீர விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதி களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் தேசியப் பேரிடர் மீட்பு படையினர் ஹெலிகாப்டர், படகு, ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ரெய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா அருகேயுள்ள ஹிரேராயன் கும்பே கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் அங்குள்ள ஒரு தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளம் வேகமாக சீறி பாய்ந்ததால் மக்கள் பாலத்தை கடக்கவே அச்சப்பட்டனர்.

அப்போது, அங்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதில் வெள்ளத்தில் உயிரிழந்த ஒரு பெண்மணியின் உடலும், உயிருக்கு போராடும் இரு குழந்தைகளும் இருந்தனர். யாதகிரிக்கு செல்ல வழி தெரியாத நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆற்றுப் பாலத்தின் மறுகரையிலே நின்றிருந்தார்.

அப்போது, வெங்கடேசன் என்ற 12 வயது சிறுவன், துணிச்சலாக ஆற்றில் இறங்கி, வேகமாக செல்லும் வெள்ளத்தில் ஆம்புலன் ஸுக்கு வழி காட்டினான். ஆறாம் வகுப்பு மாணவன் வெங்கடேசன் தன் உயிரை பணயம் வைத்து துணிச்சலாக வழிகாட்டியதால், ஆம்புலனஸ் பாதுகாப்பாக பாலத்தை கடந்தது. இந்த சம் பவத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி, தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தொழிலாளர் நலத் துறை இயக்குநர் மணிவண்ணன் கூறுகையில், ‘‘சிறுவன் வெங்க டேஷின் துணிச்சலை பாராட்டுமாறு ரெய்ச்சூர் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளேன். அதே போல சிறுவனின் பெயர் கர்நாடக அரசின் வீரதீர விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x