Published : 17 Aug 2019 07:09 AM
Last Updated : 17 Aug 2019 07:09 AM

கர்நாடக மழை வெள்ள நிவாரண நிதி கோரி பிரதமர் மோடியுடன் எடியூரப்பா சந்திப்பு

இரா.வினோத்

புதுடெல்லி

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கர்நாடகாவுக்கு மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 22 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் சிக்கிய 6 லட்சத்து 97 ஆயிரத்து 948 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத் துக்கு 61 பேர் மரணம் அடைந் துள்ள நிலையில் 15 பேர் மாயமாகியுள்ளனர். 859 கால்நடை கள் உயிரிழந்துள்ளன.

கர்நாடகா முழுவதும் 1,221 முகாம்கள் அமைக்கப்பட்டு அவற் றில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 617 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 4.69 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துவிட்டன. 5 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மழை வெள்ளத்தால் ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா மத்திய அரசின் நிதியுதவி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை கோருவதற்காக நேற்று டெல்லி சென்றார். கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, சுரேஷ் அங்கடி, சதானந்த கவுடா, கர்நாடக தலைமை செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர், பாஜக மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், அசோக், உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவுக்கு மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் எடியூரப்பா கோரிக்கை விடுத்தார். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க உதவிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் மழை வெள்ள பாதிப்பு குறித்த விவரங்கள், மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை குறித்த மனுவை மோடியிடம் வழங்கினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா கூறியதாவது:

கர்நாடக மழை வெள்ள பாதிப்பு குறித்தும், நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். இதனை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பிரஹலாத் ஜோஷி, சதானந்த கவுடா ஆகியோர் ஏற்கெனவே நேரில் பார்வையிட்டுள்ளதையும் விளக்கினேன்.

கர்நாடகாவில் வரலாறு காணாத வகையில் சேதம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தேன். எங்களது கோரிக்கைகளை எல்லாம் பொறுமையாக கேட்ட பிரதமர், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய அரசின் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்புவதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் நிதி உதவி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என உறுதியளித்தார்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

பாஜக தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, செயல்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் எடியூரப்பா சந்தித்து பேசினார். அப்போது கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x