

புதுடெல்லி, பிடிஐ
காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா கேட்டுக் கொண்டதற்கிணங்க ஐநா மூடிய அறையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளது மோடி தலைமை பாஜக அரசின் ‘ராஜிய தோல்வி’ என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் நண்பர்களுடன் பேசி இந்தக் கூட்டத்தை பிரதமர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தான் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மிர், லடாக் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமே, இதில் எந்த ஒரு புற குழுவோ, அமைப்போ தலையிட உரிமையில்லை. 48 ஆண்டுகளில் முதல்முறையாக ஐநா காஷ்மீர் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. ஆகவே இது பாஜக அரசின் மிகப்பெரிய ராஜியத் தோல்வி என்று அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
“பிரதமர் அமைதியாக இருக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் உடனடியாக தொலைபேசியைக் கையில் எடுத்து இந்தியாவின் நட்பு நாடுகள் அனைத்திலும் பேசி இதனைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.