

மலப்புரம் | அப்துல் லத்தீப் நாஹா
மழை வெள்ளத்தால் கேரளா மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்து வருவது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் நெருக்கடியான தருணங்களில் செய்யப்படும் உதவிகள் மனிதநேயத்திற்கான சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்வதைக் காணமுடிகிறது.
கடந்த வியாழக்கிழமை காவலப்பராவில் பேரழிவுகரமான நிலச்சரிவு ஏற்பட்டது. சமீப காலத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவு இதுதான் என்று கூறப்படுகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடும் மழை வெள்ளம் காரணமாக கேரளாவின் பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன; நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வது அவ்வளவு எளிதல்ல. மருத்துவமனையின் தொலைவு காரணமாகவும் விரைவில் அதைச் சென்றடைய முடியாத காரணத்தாலும் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே ஒரு மசூதி பிரேதப் பரிசோதனை அறையாக மாற்றப்பட்டுள்ளது.
இதில் பலியானவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல போத்துக்கலில் உள்ள சலாபி ஜுமா மசூதி அதன் கதவுகளைத் திறந்தது. இதில், பிரேதப் பரிசோதனைக்காக மசூதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட உடல்கள் முஸ்லிம்களின் உடல்கள் மட்டுமல்ல. ஆனால் மசூதியின் பொறுப்பாளர்கள் தொழுகைக் கூடத்தின் ஒரு பகுதியையும், பிரேதப் பரிசோதனைசெய்வதற்கான பிற வசதிகளையும் வழங்கினர்.
இதுகுறித்து மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரியின் உதவியாளர் பரமேஸ்வரன் கூறுகையில், ''இந்த மசூதிக்குள், முகமது, சந்திரன், சரஸ்வதி, சாக்கோ என வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களின் சடலங்களும் கொண்டுவரப்பட்டன. இதைவிட சிறந்த மனிதநேயத்திற்கான உதாரணத்தை நீங்கள் பார்த்துவிட முடியாது என்றுதான் நினைக்கிறேன். உலகம் முழுவதும் இது பாராட்டப்பட வேண்டும். மசூதி
அதிகாரிகளுக்கு எனது சல்யூட்'' என்றார்.
பிரேதப் பரிசோதனைக்குத் தலைமை தாங்கிய தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.எஸ். சஞ்சய் தெரிவிக்கையில், ''போத்துக்கலின் உள்ளூர் மக்கள் காட்டிய மனிதநேயத்தால் என் மனம் மிகவும் கரைந்துவிட்டது. மசூதி போன்ற ஒரு புனித இடத்தை பிரேதப் பரிசோதனை அறையாக மாற்றுவது சமூக நல்லிணத்தின் பூமியாகத் திகழும் கேரளாவுக்கே உண்டான ஓர் அற்புதமான அடையாளத்தை இது வெளிப்படுத்தியுள்ளது'' என்றார்.
மசூதியில் இணைக்கப்பட்ட மதரஸாவில் பயன்படுத்தப்படும் மேசைகள் மற்றும் பெஞ்சுகள் ஒன்றாக வைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. உடல்களைக் கழுவி குளிப்பாட்டுவதற்காகவும் ரத்தக்கறைகளை நீக்கவும் அங்கேயே ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. தன்னார்வலர்கள் குழு ஒன்று உடல்களைச் சுத்தம் செய்வதிலும், குளிப்பாட்டுவதிலும் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் நம்பிக்கைகளையும் அவர்கள் மதித்தனர்.
‘நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடம்’
உள்ளூர் விவசாயியும் சமூக சேவகருமான எஸ்.ஜமாலுதீன் கூறுகையில், ''மசூதி மேலாளர்களின் ஆதரவுக்காக பெருமைப்படுகிறேன். மரணம் என்பது சமத்துவம். அதற்கு எந்த மதமும் சாதியும் தெரியாது. மதம் எனும் எல்லையைக் கடந்து உயர்ந்து நிற்கவேண்டிய நேரம் இது'' என்றார்.
தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணரான எம். லெவிஸ் வசீம் மசூதி மேலாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார். ''இயற்கையால் அழிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் நன்மை மற்றும் சமத்துவவாதம் காட்டப்படுவதை உலகம் பார்க்க வேண்டும்'' என்றார்.