Published : 16 Aug 2019 04:07 PM
Last Updated : 16 Aug 2019 04:07 PM

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: தலைமைச் செயலாளர் அறிவிப்பு

ஸ்ரீநகர்

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது, ஆகஸ்ட் 19ம்- தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் நிலைமை விரைவில் சீரடையும், கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படும் என வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், காஷ்மீரில் பள்ளிகள் 19-ம் தேதி முதல் திறக்கப்படும் என தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரடைந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளோம். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஆகஸ்ட் 5-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் தற்போது வரை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நாசவேலைகளை தூண்டி விடுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்தே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசு எடுத்த நடவடிக்கையால்
உயிர்சேதம், பொருட்சேதம் என எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சட்டம் ஒழுங்கு முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 12 மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி விட்டது. 5 மாவட்டங்களில் மட்டுமே ஒரளவு கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லாவித கட்டுப்பாடுகளும் விரைவில் தளர்த்தப்படும். தகவல் தொடர்பு முழுமையாக வழங்கப்படும். ஸ்ரீநகரில் இன்று இரவு முதல் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படும். பள்ளிகள் அனைத்தும் ஆகஸ்ட் 19-ம் தேதி திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x