அணு ஆயுதங்களை ‘முதலில் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கை சூழ்நிலைகளைப் பொறுத்தது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

அணு ஆயுதங்களை ‘முதலில் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கை சூழ்நிலைகளைப் பொறுத்தது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
Updated on
1 min read

பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்த இடத்தைப் பார்வையிட்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் ‘முதலில் பயன்படுத்த மாட்டோம்’ (No First Use-NFU) என்ற அணுக்கொள்கையின் எதிர்காலம் ‘சூழ்நிலைகளை’ பொறுத்தது என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 16, 2019 மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினமாகும். இவரது ஆட்சியில்தான் 1998-ம் ஆண்டு அணு ஆயுதச் சோதனை பொக்ரானில் மேற்கொள்ளப்பட்டது.

“வாஜ்பாயின் திடமான உறுதியினால் பொக்ரான் சோதனைதான் இந்தியாவை அணு ஆயுதச் சக்தியாக மாற்றியதன் பகுதியாகவும் அதே வேளையில் ‘முதலில் பயன்படுத்தக் கூடாது’ என்ற இந்தியக் கொள்கையின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்தியா இந்தக் கொள்கையை கண்டிப்புடன் கடைபிடிக்கிறது. எதிர்காலங்களில் என்ன நடக்கும் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தது” என்று பொக்ரானுக்கு சென்று வந்த பிறகு ராஜ்நாத் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பொறுப்பான அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை எட்டியது ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசியப் பெருமையாகியுள்ளது. இதற்காக வாஜ்பாயின் மகத்துவத்துக்கு இந்த நாடு கடன் பட்டிருக்கிறது, என்றும் ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்தார்.

5வது ராணுவ ஸ்கவுட் மாஸ்டர்ஸ் சர்வதேச போட்டிகளின் நிறைவு விழா நிகழ்ச்சிகளுக்காக ஜெய்சால்மர் ராணுவ நிலையத்திற்குச் செல்லும் வழியில் ராஜ்நாத் சிங் பொக்ரானுக்குச் சென்றார். 8 நாட்டு அணிகள் பங்கேற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ராணுவம் வென்றுள்ளது. சர்வதேச ராணுவ விளையாட்டுப் போட்டிகளை ரஷ்ய ராணுவ அமைச்சகம் நடத்தியது குறிப்ப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in